வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் ‘அவிக்லி’ இன்சுலின் ஆண்டுக்கு 365 ஊசிகள் 52 ஆக குறைந்து, நீரிழிவு சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய முன்னேற்றமாக பார்க்கபப்டுகிறது.
Summary
இந்தியாவில் உலகிலேயே முதல் முறையாக வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் ‘அவிக்லி’ அல்லது ‘இன்சுலின் ஐகோடெக்’ இன்சுலின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோவோ நோர்டிஸ்க் உருவாக்கிய இந்த புதிய சிகிச்சை, type 1 மற்றும் type 2 நீரிழிவு நோயாளிகளுக்காக அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 10.1 கோடி மக்கள் நீரிழிவு நோயாலும், சுமார் 13.6 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை (Prediabetes) என்பது, இரத்தச் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும், ஆனால் ‘type 2’ நீரிழிவு நோயாக வகைப்படுத்தப்படும் அளவுக்கு இன்னும் அதிகமாகாத ஒரு நிலையாகும்.
உலகின் முதல் முதலாக மற்றும் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் இன்சுலின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

novo nordisk
டேனிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk ) type 1 மற்றும் type 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் இன்சுலினான ‘அவிக்லி’ அல்லது ‘இன்சுலின் ஐகோடெக்’- ( Awiqli or insulin icodec ) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 365 முறை செலுத்தப்படும் இன்சுலின் ஊசிகளின் எண்ணிக்கையை வெறும் 52 ஆகக் குறைத்து, நீரிழிவு சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களிடையே ஊசி போடுவதில் உள்ள பதற்றத்தைக் குறைப்பதையும், சிகிச்சையைத் தவறாமல் பின்பற்றுவதை அதிகபடுத்துவதற்கும் வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின் அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாக நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 5 இன்சுலின் பிராண்டுகளில் 4 (Mixtard மற்றும் Ryzodeg ஆகியவை இதில் அடங்கும்) ‘நோவோ நோர்டிஸ்க்’ (Novo Nordisk) நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இச்சிகிச்சைக்கான மருந்துகளை விநியோகம் செய்வதற்காக, அந்நிறுவனம் ‘அபோட்’ (Abbott) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகிலேயே அதிக நீரிழிவு நோய் பாதிப்புகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கும் நிலையில், இந்த அறிமுகம் முக்கியத்துவம் பெறுகிறது.
