H-1B, மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு செயல்முறைகளை மேலும் கடுமையாக்கக்கூடிய விதிகளை ட்ரம்ப் நிர்வாகம் தயாரித்து வருகிறது. இது, மாற்றங்கள் செலவுகளை அதிகரிக்கலாம், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா, செப்டம்பர் 2025 முதல் $100,000 ஆக உயர்த்தப்பட்டதால், இந்தியர்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1990இல் உருவாக்கப்பட்ட இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப், H1B விசா
இன்னொருபுறம், பெரும்பாலான H1B விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவிற்கு வந்தவுடன், கிரீன் கார்டு வரிசையில் நுழைந்து நீண்டகாலம் தங்குவதற்கு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். H1B விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெறுகின்றனர். தொடர்ந்து ட்ரம்பின் அமெரிக்க அரசு நிர்வாகம் H1B விசா திட்டங்களிலும் விதிமுறைகளில் மாற்றம் செய்து வருகிறது.
இந்த நிலையில், H-1B, மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு செயல்முறைகளை மேலும் கடுமையாக்கக்கூடிய விதிகளை ட்ரம்ப் நிர்வாகம் தயாரித்து வருகிறது. இது, மாற்றங்கள் செலவுகளை அதிகரிக்கலாம், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் H-1B உச்சவரம்பிலிருந்து விலக்குகளைக் குறைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

h1b visa
H-1B விதிமீறல் வரலாற்றைக் கொண்ட நிறுவனங்கள், எதிர்காலத்தில் மனுக்களைத் தாக்கல் செய்யும்போது கடுமையான ஆய்வுகளை எதிர்கொள்ள நேரிடலாம். சில பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் தற்போதைய கூடுதல் கட்டணத்தை விரிவுபடுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) திட்டமிட்டுள்ளது. அதேபோல், குடியேற்றச் சட்டங்களில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களால் பன்னாட்டு மாணவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அடுத்து, குறிப்பிட்ட சில வெளிநாட்டினர் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகப் பணிபுரிய அனுமதிக்கும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களிலும் (EADs) மாற்றங்களைச் செய்ய நிர்வாகம் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் பல பகுதிகளைக் கடுமையாக்கும் ஒரு முன்மொழியப்பட்ட விதியை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
