
உலக அளவில் பல்வேறு தலைவர்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடிய ஒரு கௌரவம் தான் நோபல் பரிசு. குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசை பெற வேண்டும் என்பதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் மிக தீவிரமாக இருப்பார்கள். அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் டிரம்புக்கு இந்த ஆசை சற்று அதிகமாகவே இருக்கிறது.
இரண்டாவது முறையாக இந்த முறை அதிபர் பதவியேற்றிருக்கும் டிரம்ப் எப்படியாவது இந்த பதவி காலம் முடிப்பதற்குள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்று விட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். அவ்வப்போது அவரே நான் தான் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவன் என கூறி வருகிறார். தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து லாபியும் செய்து வருகிறார் . ஆனால் அவருடைய இந்த ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாக போய்விட்டதாகவே சொல்லப்படுகிறது .
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதிக்கான நோபல் பரிசை வாங்கி விடலாம் என திட்டமிடார் ஆனால் அது தற்போது வரை எந்த ஒரு முடிவையும் எட்டாமல் அப்படியே நிற்கிறது. இது ஒரு புறமிருக்க இந்தியா பாகிஸ்தான் சண்டையை நான் தான் பேசி தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தேன் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறினார் . அதுவும் பெரிய அளவில் எடுபடவில்லை .
இந்த சூழலில் தான் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி படி நோபல் கமிட்டி குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசினை இந்த முறை ஏதேனும் ஒரு மனிதாபிமானம் சார்ந்து செயல்படக்கூடிய அமைப்புக்கு வழங்கலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம் . குறிப்பாக சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கக்கூடிய ஒரு அமைப்பினை தேர்வு செய்து அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள், அக்டோபர் 10ஆம் தேதி யாருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற விவரம் வெளிவந்துவிடும் என கூறுகிறது.
ஐநாவின் அகதிகள் அமைப்பாக இருக்கலாம் அல்லது யூனிசெப் ,ரெட் கிராஸ் , டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர் போன்ற ஏதேனும் ஒரு சர்வதேச அமைப்புக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது . இதனால் அமெரிக்க டொனால்ட் ட்ரம்பின் நோபல் பரிசு கனவு தகர்ந்து போயிருக்கிறது.
டிரம்ப் போர்களை நிறுத்துவதாக கூறினாலும் மறுபுறம் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு ஆதரவாக தான் இருக்கிறார் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர் . உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை திரும்ப பெற்றுக் கொண்டது, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்தும் திரும்ப பெற்றுக் கொண்டது, பல்வேறு நாடுகளோடு வர்த்தக மோதலில் ஈடுபட்டு இருப்பது என அவர் மீதான நெகடிவ் விஷயங்களே அதிகமாக உள்ளன. இப்படி ஒரு நபருக்கு எப்படி அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என ஓஸ்லோவை சேர்ந்த அமைதிக்கான ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான நீனா கிரேகர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அமைதியை கொண்டு வருபவராகவும் அமைதியை விளம்பரப்படுத்தும் நபராகவும் இருக்க வேண்டும் அப்படி ஒரு நபர் டிரம்ப் இல்லை என்பது உலகிற்கே தெரியுமே என அவர் சுட்டிக்காட்டுகிறார் . காஸாவில் நடைபெற்று வரும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உக்ரைன் தாக்குதலுக்கு ஒரு முடிவு என இரண்டிலும் வெற்றி கண்டால் தான் குறைந்தபட்சம் அவர் பரிசீலனையாவது செய்வார்கள் என கூறியிருக்கிறார்.