2026 பிஃபா உலகக் கோப்பைத் தொடர் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.
2026 பிஃபா உலகக் கோப்பைத் தொடர் நேற்று இரவு மெக்சிகோவின் புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மெக்சிகோ சிட்டி மைதானத்தில் (Estadio Azteca / Mexico City Stadium) கோலாகலமாக தொடங்கியது. மெக்சிகோவின் பாரம்பரிய கலை வடிவமான ‘பேப்பல் பிகாடோ’ (Papel picado ) எனப்படும் வண்ணக் காகித வேலைப்பாடு மூலம் உலகக் கோப்பை டிராபியின் மாதிரி வடிவம் மைதானத்தின் நடுவே பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு, பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த தொடக்க நிகழ்ச்சியில் தொடரின் அதிகாரப்பூர்வ ஆன்மீகப் பாடலான ‘டாய் டாய்’ (Dai Dai) பாடலை உலகப்புகழ்பெற்ற பாடகி ஷகீராவும் (Shakira),நைஜீரிய இசை நட்சத்திரம் பர்னா பாயும் (Burna Boy) இணைந்து பாடினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு இசை நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
பின்னர் தொடரில் முதல் போட்டியான மெக்ஸிகோ – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே மெக்ஸிகோ வீரர் குவின்நோனஸ் (julian quiñones ) முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய மெக்சிகோ அணி பல்வேறு கோல் வாய்ப்புகளை தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தது. எனினும் முதல் பாதி 1- 0 என்ற கணக்கில் முடிவடைந்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் மெக்சிகோ சிறப்பாக தொடங்கியது. குறிப்பாக 50-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரரை தள்ளிவிட்ட தென்னாபிரிக்க வீரர் யாயா சித்தோளே (yaya sithole) சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் மெக்சிகோ நட்சத்திரம் ஜிமெனஸ் (raul jimenez) இரண்டாவது கோலை அடிக்க மைதானமே அதிர்ந்தது.

Mexico win south africa FIFA Worldcup Opening Ceremony
இதனிடையே பதற்றத்தில் தென்னாபிரிக்க வீரர் தெம்பா வானே(themba zwane) மெக்சிகோ வீரரை தள்ளிவிட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த சூழலில், மெக்சிகோ வீரர் மோன்டஸ் (cesar montes) பவுல் செய்ததால் அவரும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து இறுதி விசில் ஊதப்பட்ட நிலையில், முதல் போட்டியில் மெக்சிகோ 2- 0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்று 3 புள்ளிகளை பெற்றது.
