
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ் என்றாலே பணி பாதுகாப்பு , ஊழியர்களை கண்ணியமாகவும் சரியான முறையிலும் நடத்தக்கூடிய ஒரு நிறுவனம் என்ற பெயர் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு இருந்த இந்த நற்பெயர் படிப்படியாக நீங்கி வருகிறது.
ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய பழைய மாண்பை இழந்துவிட்டது என தொடர்ச்சியாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்ற வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை பல்வேறு ஊழியர்களும் ரெடிட் தளத்தில் அம்பலப்படுத்தி வருகின்றனர். தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை இந்த ஆண்டு பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது டிசிஎஸ்.
இந்நிலையில் வேண்டுமென்றே பல்வேறு ஊழியர்களை குறிவைத்து டிசிஎஸ் வேலையில் இருந்து நீக்குவதாகவும், கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனம் திடீரென ஒரு ஊழியரை வேலையில் இருந்து நீக்கியதோடு மட்டுமில்லாமல் ஏன் வேலை விட்டு நீக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பியதற்காக அவரை அடித்து அவமானப்படுத்தி இருக்கும் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
நொய்டா டிசிஎஸ் அலுவலகத்தில் வேலை செய்து வந்த ஒரு ஊழியர் தன்னுடைய ரெடிட் பக்கத்தில் இதனை விரிவாக பதிவு செய்து இருக்கிறார். அதில் டிசிஎஸ் நிறுவனம் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அது மட்டும் இன்றி டிசிஎஸ் ஹெச்ஆர் என்னை அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தினார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். செப்டம்பர் 19ஆம் தேதி அன்று நொய்டா அலுவலகத்தில் தனக்கு இதுதான் நேர்ந்தது என அவர் விரிவாக பதிவு செய்து இருக்கிறார்.
திடீரென என்னை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்கள் நான் அவர்களிடம் எதற்காக என்னை வேலை விட்டு நீக்குகிறீர்கள் , அப்படி என்றால் இதற்கான நிதி சார்ந்த இழப்பீடுகளை எனக்கு வழங்குவீர்களா , லேப்டாப் ஆகியவற்றை ஒப்படைப்பதற்கான மற்ற நடவடிக்கைகள் என்னென்ன என கேட்டு மின்னஞ்சல் அனுப்பினாராம். பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் ஹெச்.ஆர்-லிருந்து தனக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை என குறிப்பிட்டு இருக்கும் அவர் காலை 10:30 மணியளவில் என்னுடைய லாகின் உள்ளிட்ட அனைத்துமே பிளாக் செய்து விட்டார்கள் என கூறியுள்ளார்.
மாலை 4.30 மணி அளவில் நேரடியாக ஹெச்ஆர்- ஐ சென்று சந்தித்தேன் , அப்போது அங்கிருந்து ஹெச்ஆர் அதிகாரிகள் உங்களுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் பணியில் நீக்கப்பட்டு விட்டீர்கள், எங்கு வேண்டுமானாலும் சென்று நீங்கள் புகார் செய்து கொள்ளுங்கள் என பதில் அளித்தார்களாம். மேலும் போனில் இவற்றை பதிவு செய்ய முயன்றதாகவும் அப்போது இவரை இழுத்து கைகளை முறுக்கி தாக்கி துன்புறுத்தியதாகவும் அவமானப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் சென்று வீடியோ ஆதாரத்தோடு அவர் புகார் அளித்தாராம். இது தொடர்பாக காவல்துறையினர் ஹெச்ஆர்-ஐ அழைத்த போது அவர்கள் வர மறுப்பு தெரிவித்து விட்டனர் என கூறியிருக்கிறார். தற்போது எனக்கு வேலையும் இல்லை, ஏன் வேலையை விட்டு அனுப்பினார்கள் என்ற காரணமும் கூறவில்லை, நிதி ரீதியான இழப்பீடுகளும் கிடைக்குமா என்பது தெரியவில்லை, மேலும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கும் நான் ஆளாகி இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
இது போல உங்களில் யாருக்கும் நடந்திருக்கிறதா இந்த விஷயத்தை நான் நீதிமன்றம் கொண்டு செல்ல விரும்புகிறேன் எனக்கு யாரேனும் உதவி செய்ய முடியுமா என கேட்டிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. பலரும் இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அப்பொழுதுதான் அவர்களுக்கு புரியும் என கூறியிருக்கின்றனர் . ஒரு நபர் இந்த வீடியோவை நீங்கள் சமூக வலைதளத்தில் வெளியிடுங்கள் என கூறியிருக்கிறார்.