தவெக அமைச்சரவையில் இணையும் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளை திமுக மூத்த தலைவர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது அவருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர்.

விஜய் – ராகுல் காந்தி
இந்நிலையில் மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்த நிலையில், 21ஆம் தேதியான நேற்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்தசூழலில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என 2 இலாகாக்களுக்கு அமைச்சர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம்பெறும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் தான் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை முஸ்லிம் லீக் கட்சி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து ஒப்படைத்தது. விசிக மட்டும் தாமதப்படுத்திவந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே, கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் கூட்டணி வைத்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து வந்த விசிக தவெக அமைச்சரவையில் இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் தான், தவெக அமைச்சரவையில் இணையும் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளை திமுக மூத்த தலைவர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஏணி சின்னத்தைக் குறிப்பிட்டு ஐயுஎம்எல் கட்சியையும், சிறுத்தையை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் சாடி உள்ளார். முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு ஆதரவாகிவிட்டதாக விமர்சித்துள்ளார். அதோடு, காலதேச வர்த்தமானத்திற்கு காத்திருப்போம், வெற்றி நமக்கே என ஆ. ராசா குறிப்பிட்டுள்ளார். திமுக மூத்த நிர்வாகியான இவரின் இந்த கருத்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
