மேற்கு வங்காளத்தில் உள்ள 293 தொகுதிகளுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக 207 இடங்களில் வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மீண்டும் மறுதேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜாஹீர் கான் திடீரென விலகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், கடந்த ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இரண்டாம்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, புதிய வாக்குப்பதிவு மே 2 நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
எனினும், தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மீண்டும் மறுதேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஃபால்டா தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்கள் டேப் கொண்டு மறைக்கப்பட்டதாகவும், வாக்குச்சாவடி ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் பல்வேறு தரப்பினர் புகார் அளித்த நிலையில், அதில் மொத்தம் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் மே 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டு 24ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், ஃபால்டா மறுதேர்தலில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகியுள்ளார்.

ஜஹாங்கீர் கான்
அவர் தனது முடிவிற்கான எந்தக் காரணத்தையும் தெரிவிக்காத நிலையில், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இவர், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் உதவியாளர் ஆவார். இவர், விலகியிருப்பது மம்தாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்பு நடைபெற்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடிப் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவுக்கு சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மேற்கு வங்காளத்தில் உள்ள 293 தொகுதிகளுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக 207 இடங்களில் வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
