அடுத்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக கிரிக்கெட் வல்லுநர்களால் புகழப்படும், “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்” என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. அவர் ஐபிஎல் தொடரில் பல சீனியர் பந்துவீச்சாளர்களின் பந்துகளில்கூட அசால்ட்டாக சிக்ஸர் அடிக்கிறார். இதனால், உலக கிரிக்கெட் வல்லுநர்களால் புகழப்படுகிறார். இந்த நிலையில், “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்” என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல் வாகன்
இதுகுறித்து ‘ஸ்டிக் டூ கிரிக்கெட்’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், “இந்தச் சிறுவன் ஏற்கெனவே 35, 36 பந்துகளில் சதம் அடித்து அசுர வேகத்தில் முன்னேறி வருகிறான். 2024ஆம் ஆண்டில் அபிஷேக் சர்மா 42 சிக்ஸர்கள் அடித்ததே ஒரு இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. ஆனால் வைபவ் இப்போதே 37 சிக்ஸர்களை விளாசிவிட்டார். தற்போது உலகிலேயே மிகச்சிறந்த சிக்ஸர் ஹிட்டர் இவர்தான்” என்றார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் வீரரான ஃபில் டப்னெல், “இப்போதே இவ்வளவு வேகம் காட்டினால், 21 வயதிற்குள் அவர் சோர்வடைந்து (Burnt out) விடுவார்” என்றார். அதற்குப் பதிலளித்த மைக்கேல் வாகன், “21 வயதிற்குள் இவரிடம் ஓய்வு காலத்திற்குத் தேவையான அளவு கோடிக்கணக்கான பணம் சேர்ந்துவிடும். அதனால், அவர் 21 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி
உடனே குறுக்கிட்ட இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டைர் குக், “அவர் ஒரு போட்டியில் வெறும் 30 பந்துகளைத்தான் விளையாடுகிறார், அதனால் அவர் சோர்வடைய வாய்ப்பே இல்லை” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அவர்கள் விளையாட்டாகப் பேசினாலும், வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வளர்ச்சி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. இதற்கிடையே, அடுத்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
