ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. காபூலில் நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்களை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். காந்தகார் விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு மற்றும் குடியிருப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாகத் தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானின் கோஹாட் ராணுவ முகாம் மீது ஆப்கானிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் அரசு எச்சரித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இதனால் இருநாட்டு உறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும், தாலிபன் மீண்டும் தலைமைக்கு வந்ததற்குப் பிறகு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அத்துமீறலுக்குப் பதிலடியாக, ஆப்கானிஸ்தான் விமானப்படை பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் பகுதியில் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. கோஹாட் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் மிக முக்கியமான மூலோபாய ராணுவ மையங்கள் மற்றும் வசதிகள் இலக்கு வைக்கப்பட்டன. கோஹாட் ராணுவக் கோட்டை நேரடியாகத் தாக்கப்பட்டது. அந்தக் கோட்டையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள துராந்து எல்லைப் போர் கட்டளை மையம் மற்றும் கோட்டை தளபதியின் அலுவலகம் ஆகியவை மிகத் துல்லியமாகத் தாக்கப்பட்டன.

Pak – afgan warreuters
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டளை மையம், ஆயுதக் கிடங்குகள் மற்றும் வீரர்களின் தங்கும் விடுதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் தரப்பிற்குப்பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை பாகிஸ்தான் போர் விமானங்கள் காபூல் மற்றும் கந்தகாரில் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளதால், எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
