இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் முக்கிய போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Summary
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலால், 50-க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. IRIS Shahid Bahman Bagheri உள்ளிட்ட முக்கிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதனால் ஈரானில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதமாக போர் பதற்றம் நிலவிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு வாரத்துக்கு முன்னர் இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

iran atttack
இந்த போர் ஏற்பட்டால் இரு தரப்புக்கும் அதிக சேதம் ஏற்படும் என்றும், மத்திய கிழக்கு முழுவதும் இருக்கும் அமெரிக்க நிலைகள் தகர்க்கப்படும் என்றும் பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். அதற்கு ஏற்ப ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
அதன் உச்சகட்டமாக பக்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-வது கடற்படைத் தலைமையகம் ஈரானால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. மேலும் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளும் ஈரானின் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
எனினும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி, போர் தொடங்கிய கடந்த 11 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
IRIS Shahid Bahman Bagheri என்ற ஈரானின் மிக முக்கியமான டிரோன் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாகவும், ஈரானின் நவீனத் தொழில்நுட்பத்தில் உருவான 3 கப்பல்கள் மற்றும் ஈரானின் மிகப்பெரிய மிதக்கும் ராணுவத் தளமாக கருதப்படும் IRIS Makran ஆகியவை மூழ்கடிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதோடு அழிக்கப்பட்ட மற்ற ஈரானிய ராணுவ கப்பல்களின் பெயர்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதனை தவிர ஈரானில் உள்ள 5000 இடங்களை இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரானில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
