டி20 உலகக்கோப்பைக்கு பின் விமானம் கிடைக்காததால் இந்திய கிரிக்கெட் வீரர் 3ஆம் வகுப்பு ஏசி பிரிவில் ரயிலில் பயணிக்க முடிவுசெய்துள்ளார். அப்போது நடந்த விசயத்தை ஷிவம் துபே பகிர்ந்துள்ளார்..
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்காக முக்கிய பங்கு வகித்த ஷிவம் துபே, விமானம் கிடைக்காததால் 3rd AC ரயிலில் பயணித்தார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கவலைப்பட்டபோதும், துபே தனது அடையாளத்தை மறைக்க தொப்பி, டீ-சர்ட், மாஸ்க் அணிந்து பயணித்தார்.
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்காக பல கேம் சேஞ்சிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஷிவம் துபே. அதிலும் ஷிவம் துபே பங்கேற்ற இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றதேயில்லை என்பதால், இந்திய அணியின் லக்கி சார்ம்-ஆக ஷிவம் துபே விளங்கிவருகிறார்.

ஷிவம் துபே
இந்தசூழலில் நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன் ஆன பிறகு, ஷிவம் துபே வீட்டிற்கு செல்ல விமானம் கிடைக்கவில்லை. அதனால் சாலை வழிப்பயணத்தை விடுத்து ரயில் பயணத்தை துபே தேர்ந்தெடுத்தார். அவர் வீட்டிற்கு செல்ல மூன்றாம் வகுப்பு ஏசி ரயில் டிக்கெட்டுகளை புக்செய்தார்.
யாராவது உங்களை அடையாளம் கண்டுவிட்டால் என்ன செய்வது என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பயம்கொள்ள, ஒரு தொப்பி, முழங்கை வரையிலான டீ-சர்ட் மற்றும் மாஸ்க்கை அணிந்துகொண்டு பயணப்பட்டுள்ளார் ஷிவம் துபே.
ரயிலில் நடந்த சம்பவம்..
ரயிலில் பயணித்தது குறித்து பேசியிருக்கும் ஷிவம் துபே, “விமானங்கள் எதுவும் கிடைக்கவில்லை, அதனால் நான் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு அதிகாலை ரயிலில் செல்ல முடிவு செய்தேன். நாங்கள் சாலை வழியாகச் சென்றிருக்கலாம், ஆனால் ரயில் பயணம் விரைவாக இருக்கும் என்பதால் தேர்ந்தெடுத்தோம்.
எங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும், ‘ஸ்டேசனிலோ அல்லது ரயிலிலோ யாராவது உங்களை அடையாளம் கண்டால் என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டனர்.

கவலைப்படவேண்டாம் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு வரை காரில் காத்திருந்து, பின்னர் கடைசிநேரத்தில் விரைவாக வந்து ரயிலில் ஏறுவேன் என்று என் மனைவியிடம் சொன்னேன். இரவில், நான் கழிப்பறையைப் பயன்படுத்த என் படுக்கையிலிருந்து கீழே இறங்கினேன், யாரும் என்னை அடையாளம் காணவில்லை. ஆனால் டிக்கெட் செக்கர் வந்து கேட்கும்போது என்னுடைய பெயரை ஷிவம்துபே என்று கூறினேன்.
ஷிவம் துபே? என்றால், கிரிக்கெட் வீரரா என்று செக்கர் கேட்டார், அப்போது மனைவி குறுக்கிட்டு, இல்லை இல்லை அவர் ஏன் இங்கே வரப்போகிறார் என்று கூறினார். பின்னர் டிக்கெட் செக்கர் அடுத்த கோச்சிற்கு சென்றுவிட்டார்” என்று விளக்கியுள்ளார்.
ஆரம்பத்தில் அவர் விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்த்த அதிகாரிகள், அவர் தேர்ந்தெடுத்த போக்குவரத்து முறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இருப்பினும், அவர் வருவதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதால், நிலையத்திலிருந்து அவர் வெளியேறுவது திறமையாகக் கையாளப்பட்டது.
