கோவிட் தடுப்பூசி செலுத்திய பின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்க ‘குறைந்தபட்ச இழப்பீட்டுக் கொள்கை’ உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய இழப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் எந்தத் தவறுகளையும் ஒப்புக்கொள்வதாகக் கருதப்படக்கூடாது என்றும் நிவாரணம் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக தங்களது குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த மரணங்கள் குறித்து ஒரு சுதந்திரமான நிபுணர் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறையான உடற்கூறாய்வு மற்றும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

கோவிட் மருந்து
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன்படி, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிக்குப் பின்னர் ஏற்படும் தீவிர பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்க ‘குறைந்தபட்ச இழப்பீட்டுக் கொள்கையை’ மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
இந்த நிவாரணமானது அரசின் மீதோ அல்லது அதிகாரிகளின் மீதோ உள்ள தவறைச் சுட்டிக்காட்டுவதாக அமையாது, மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை கருத்தில் கொண்டு ‘மனிதாபிமான அடிப்படையில்’ மட்டுமே இந்த உதவி வழங்கப்பட வேண்டும் என தெளிவுபடுத்தினர். கொரோனா தடுப்பூசிக்குப் பிந்தைய பாதிப்புகளைக் கண்காணிக்கும் தற்போதைய நடைமுறை தொடர வேண்டும் என்றும், அதுகுறித்த தரவுகளைச் சுகாதாரத் துறை அவ்வப்போது பொதுவெளியில் வெளியிட்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர் .

தடுப்பூசி
இந்த விவகாரத்தை ஆராய ஏற்கனவே உள்ள அறிவியல் ரீதியான கண்காணிப்பு அமைப்புகளே போதுமானது என்றும், தனியாக ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி பதிப்பு இழப்பீட்டுக் கொள்கையானது, பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் பிற சட்டப்படியான நிவாரணங்களைப் பெறுவதற்கு எந்தவித முட்டுக்கட்டையாகவும் இருக்காது என்றும் தெளிவுபடுத்தினர்.
