ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை அணியிலிருந்து டிரேடிங் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜாவின் கனவு சிதைந்து போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் டி20 கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரை முன்னிட்டு, 10 அணிகளிலும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதாவது, இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார். அதேசமயம், சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்திருந்தது. சஞ்சு சென்னைக்கு வந்ததைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புதிய கேப்டனாக ரியான் பராக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியான் பராக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜடேஜாவின் கனவு சிதைந்து போயிருப்பதாகக் கூறப்படுகிறது. 2019இல் அறிமுகமானதிலிருந்து, பராக் ராயல்ஸ் அணியில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு சஞ்சு சாம்சன் காயம் காரணமாக சில போட்டிகளில் பொறுப்பு கேட்பனாக பராக் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் வரலாற்றில் இளைய கேப்டன் மற்றும் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது இளைய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

riyan parag
பராக் நியமனம் குறித்து பேசிய RR இயக்குநரும் தலைமைப் பயிற்சியாளருமான குமார சங்கக்கார, “ரியான் ஒரு உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக வளர்ந்துள்ளார். ஏற்கனவே அவர் தலைமைத்துவக் குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். மேலும் அவர் இந்தப் பதவியில் மேலும் வளர்வார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இதுகுறித்து ரியான் பராக், “ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு வீடு போன்றது. இந்த அணி என்னை நம்பியது, வளர்த்தது, ஒவ்வொரு சீசனிலும் முன்னேறத் தூண்டியது. இப்போது அணியை வழிநடத்துவது மிகவும் சிறப்பானது. இந்த பொறுப்பை முழுமையாக ஏற்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.
