குளிர்கால ஒலிம்பிக்கில் நேரடி தொலைக்காட்சியில் தனது காதலியை ஏமாற்றியதாக நார்வே ஒலிம்பியன் ஸ்டர்லா ஹோல்ம் லாக்ரெய்ட் ஒப்புக்கொண்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிலன்-கோர்டினா 2026 குளிர்கால ஒலிம்பிக்கில் 20 கிமீ தனிநபர் பயத்லானில் வெண்கலப் பதக்கம் வென்ற நார்வே நாட்டைச் சேர்ந்த ஸ்டர்லா ஹோல்ம் லாக்ரெய்ட், 3 மாதங்களுக்கு முன்பு தனது காதலியை ஏமாற்றியதாக நேரடி தொலைக்காட்சியில் ஒப்புக்கொண்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டர்லா ஹோம் லாக்ரெய்ட் என்பவர் நார்வே நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பயத்லெட் (Biathlon) வீரர் ஆவார். இவர், ஒலிம்பிக் மற்றும் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், மிலன்-கோர்டினா 2026 குளிர்கால ஒலிம்பிக்கில் 20 கிமீ தனிநபர் பயத்லானில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் பதக்கத்திற்குப் பிறகு பேட்டியளித்த அவர், தனது காதலி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். அவர், “இப்போது என்னை வித்தியாசமாகப் பார்க்கும் பலர் இருக்கலாம், ஆனால் எனக்கு அவள் மீது மட்டுமே கண்கள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக விளையாட்டு சற்று பின்தங்கியுள்ளது. ஆமாம், இதை அவளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நான் என் வாழ்க்கையின் அன்பைச் சந்தித்தேன். அவள், உலகின் மிக அழகான மற்றும் அன்பான நபர். மூன்று மாதங்களுக்கு முன்பு நான் எனது மிகப்பெரிய தவறைச் செய்து அவளை ஏமாற்றினேன். அவள்தான் என் வாழ்க்கையின் பெண் என்பதை உணர்ந்துவிட்டேன், அதை அவளிடமிருந்து மறைத்து என் வாழ்நாள் முழுவதும் வாழ முடியாது. இதைத் தீர்க்க என்னுடைய ஒரே வழி, எல்லாவற்றையும் அவளிடம் சொல்வதுதான். அவள் இன்னும் என்னை நேசிக்க முடியும் என்று நம்புகிறேன். நான் இழப்பதற்கு எதுவும் இல்லை. நான் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். ஆனால் நான் தவறுகள் செய்யும்போது அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இது, இணையத்தில் வைரலாகி பல பதிவுகளைப் பெற்று வரும் நிலையில், எதற்காக அவரை ஏமாற்றினார் என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் தெரியவில்லை.
