
ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்து, தன்னும் குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் அவர் பொறுப்பு என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் தெரிவித்தார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரீஸில்டா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி புகார் அளித்தார். உடன் கிரீஸில்டாவின் வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவும், மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிசில்டா, “எனக்கு மிரட்டல் வரவில்லை. ஆனால் என் குழந்தைக்கும், எனக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் எனக்கும், என் குழந்தைக்கும் எது நடந்தாலும் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம்” என்றார்.
தொடர்ந்து வழக்கறிஞர் சுதா எம்.பி பேட்டி கூறுகையில், “தமிழ்நாடு மகளிர் ஆணையத்திடம் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் ஜாய் கிரிஸ்டில்லாவை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரை இதுவரை ஏற்கப்படவில்லை. அனைத்து காவல் நிலையங்களிலும் தொடர்பு கொண்டு கேட்டபோது எங்கள் எல்லைக்குள் வரவில்லை என தெரிவிக்கின்றனர்.
ஆயிரம் விளக்கு பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தோம். யாருக்கு எதிராக புகார் அளித்தோமோ அவரை இதுவரை விசாரணைக்கு அழைத்ததாக தெரியவில்லை. புகார் அளித்து 1.5 மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழ்நாடு மகளிர் ஆணையம் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் நம்பிக்கை வைத்து புகார் அளித்துள்ளோம்.
பிறக்கவுள்ள குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். குழந்தை எந்த நேரத்திலும் பிறக்கும் சூழலில் தன் தகப்பன் யார் என்று தெரியாத நிலையில் குழந்தை பிறக்க கூடாது. வழக்கமாக காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தால் மாலைக்குள் தொடர்புடையவரை விசாரணைக்கு அழைப்பார்கள். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி அணுமுறையை காவல்துறை காட்டி வருகிறது என தோன்றுகிறது” என்றார்.