இன்று சட்டமன்றத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக மற்றும் பாஜக 3 கட்சிகளும் எதிர்ப்பை பதிவுசெய்தன.
Summary
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை தொகுதி எண்ணிக்கை 543 ஆகவே நிரந்தரமாக இருக்க வேண்டும், அதிலேயே பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் 2026 கணக்கெடுப்புக்கு பின் தொகுதி மாற்றத்தை அரசு எதிர்க்கிறது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், அரசு நிகழ்வுகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை கண்டிப்பாக முதலில் பாட வேண்டும் மற்றும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் முதலிய முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் விஜய்
அந்தவகையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். மக்களவை தொகுதி எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றி வைத்து பேசிய முதல்வர் விஜய், “ நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும்
மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா 50% இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை உயர்த்தினாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுக்கு பின் நடைபெறும் தொகுதி மறுவரையில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். அதனால் மக்களவையில் தற்போதுள்ள எண்ணிக்கையே அப்படியே இருக்க வேண்டும்.
நாட்டு மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள் தான், அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும்; நம் வீட்டு பெண்கள் அரசியலில் முன்னேற இட ஒதுக்கீடு தர வேண்டும். மக்கள் தொகுதி கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டாலும், அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஆகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை காரணம் காட்டி நிறுத்தக் கூடாது” என்று பேசினார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை பதிவுசெய்தன. தேமுதிக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
