தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு கிறிஸ்தவ கல்லூரி என்பதால் முதலில் சிறிய அளவில் ஜெபம் செய்யப்பட்டதாகவும், ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்பட்டதாகவும் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலளித்துள்ளார்.
Summary
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற 58வது விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில், முதலில் கல்லூரி ஜெபம், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. பொதுநிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற முதலமைச்சர் உத்தரவு பின்னணியில் இந்த விவகாரம் கவனம் ஈர்த்தது. அமைச்சர் ராஜேஷ்குமார், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்பட்டது என விளக்கம் அளித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் 58ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்..
முன்னதாக கல்லூரியின் வாழ்த்துப்பாடல் முதலாவதாக பாடப்பட்டு அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையானது. முந்தைய தினம்தான் பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். இந்த நிலையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அமைச்சர் ராஜேஷ்குமார்
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேஷ்குமார், “தமிழ்த்தாய் வாழ்த்து பொது நிறுவனங்கள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், இப்படிப்பட்ட இடங்களில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும். இது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் கல்லூரி என்பதால் சின்னதாக ஜெபம் செய்தார்கள், அதை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் முதலில் தமிழ் தாய் வாழ்த்து தான் பாடப்பட்டது” என பதிலளித்தார்.
