ஹைதராபாத்தில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகமான NALSAR-ல் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமை விருந்தினராகப் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து சட்டம் பயிலும் மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘சலோ சன்சத்’ போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, கடந்த ஜூலை 22-ஆம் தேதி தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு குறிப்பிடப்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு, “வீடியோக்களைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை” என்ற பொருளில் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், “எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

NALSAR UNIVERSITY
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள NALSAR பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்தை தலைமை விருந்தினராக அழைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தங்களது கடிதத்தில், காவல்துறை நடவடிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் அணுகிய விதம், தாங்கள் சட்டக் கல்வியில் கற்றுக்கொள்ளும் அரசியலமைப்பு உரிமைகள், போராட்ட உரிமை மற்றும் நீதி அணுகல் ஆகிய அடிப்படைக் கொள்கைகளுடன் முரண்படுவதாகக் கூறியுள்ளனர். எனவே, தலைமை நீதிபதி சூர்ய காந்தைப் பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினராக அழைக்கும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவரிடமிருந்து பட்டம் பெற விருப்பமில்லை என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Delhi NEET protests
சட்டம் பயிலும் மாணவர்களே நாட்டின் தலைமை நீதிபதியை பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
