தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு ஆர்வலர்கள், அடுத்தடுத்து தடுப்புகளைத் தகர்த்தெறிந்தபோது தண்ணீர் பீய்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஜார்க்கண்டில் பல்வேறு பணி நியமனத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு ஆர்வலர்கள், இன்று மாநிலச் சட்டமன்றத்தை நோக்கிய பேரணியில் பங்கேற்றனர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடைபெற்றதாகக் கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக்காரர்கள் பேரவை வளாகத்தை முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
‘JPSC-JSSC சீர்திருத்த மேடை’ மற்றும் ‘JLKM’ (ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா) அமைப்புகளின் கீழ் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய தேர்வுகளை ரத்துசெய்து, முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
அரசுடன் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்றனர். வழியில் அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு தடுப்புகளைத் தாண்டி அவர்கள் முன்னேறியதால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பேரவை வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே, ஏழு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ, படுத்தபடியே பேரணியில் பங்கேற்றார். மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டப்பேரவைக்குள்ளும் பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். ’மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாதே’ என அவர்கள் வலியுறுத்தினர். மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
