லயோலாவில் 3 வருடங்கள் பி காம் படித்துவிட்டு வெளியே போகும்போது, ஏதாவது ஒன்று செய்துவிடுவேன் என்ற நம்பிக்கை பிறந்தது.
Summary
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, 30 ஆண்டுகள் கழித்தும் லயோலா தன்னை மீண்டும் மாணவனாக உணர வைக்கும் இடம் என உருக்கமாக பகிர்ந்தார். பி காம் படித்த மூன்று ஆண்டுகள் தன் வாழ்க்கைக்கு நம்பிக்கை, அடையாளம், மரியாதை கொடுத்ததாகவும், லயோலா குடும்பத்திற்காக எப்போதும் இருப்பேன் எனவும் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய சூர்யா “என் அன்பான குடும்பமான லயோலைட்ஸ்… இங்கு வந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது நான் 92 பேட்ச். பழைய நினைவுகள் என்னை தாக்குகிறது. 30 வருடங்களானாலும், என்ன தான் செய்தாலும் இங்கு வரும் போது மீண்டும் ஒரு மாணவனாக தான் உணர்கிறேன். அதைத்தான் லயோலா உங்களுக்கு செய்யும். நான் இங்கு டிகிரி மட்டும் வாங்கவில்லை, எல்லோரும் உருவாவதே இங்குதான். இங்கிருந்து வெளியே செல்லும் போது, நீங்கள் யார் என்ன என்பதை லயோலா உங்களுக்கு கற்றுத்தரும்.
நான் லயோலா உள்ளேவரும் போது வெவ்வேறு தளங்களை சேர்ந்த நபர்களை பார்த்தேன். அவர்களை பார்க்கையில் நான் என்ன செய்ய போகிறேன் என்ற அச்சம் எனக்கு இருந்தது. லயோலாவில் 3 வருடங்கள் பி காம் படித்துவிட்டு வெளியே போகும்போது, ஏதாவது ஒன்று செய்துவிடுவேன் என்ற நம்பிக்கை பிறந்தது. நான் இந்த வாழ்க்கையில் ஜெயிப்பேன் என உறுதி கிடைத்தது. இங்கு உள்ளவர்கள் இனி இங்கு படிக்க போகிறவர்கள் எல்லோரையும் என் குடும்பமாக பார்க்கிறேன். உங்கள் அனைவருக்காக நான் இருக்கிறேன்.
நான் லயோலா கல்லூரி என சொன்னதும் நான் கேட்ட விஷயங்கள் சில நடந்திருக்கின்றது. ராஜ்குமார் தான் எனக்கு இங்கே சேர்க்கை விண்ணப்பம் வாங்கி கொடுத்தார். அவரால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவர் அகரம்-க்கு நிறைய செய்திருக்கிறார். படிப்பு முடிந்த பின் எல்லோரும் வெளியே போய் தான் ஆக வேண்டும். ஆனால் பி காம் டிபார்ட்மெண்ட் கட்டடம், கேன்டீன், மரத்தடி, சர்ச், கால்பந்து மைதானம் எதுவும் மனசை விட்டு நீங்கவில்லை. யாராவது என்னிடம் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால் உங்கள் படிப்போடு சேர்த்து பி காம் என்று மட்டும் சொல்ல மாட்டேன். பி காம் லயோலைட் என சொல்வேன். எதிரில் இருப்பவர் முகத்தில் ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். லயோலா எனக்கு படிப்பு மட்டும் கொடுக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. எங்கு போனாலும் லயோலா என கெத்தாக சொல்லுங்கள்.” என்றார்.
