அசாமில் கனமழை காரணமாக ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் ஆண்டுதோறும் பேரழிவு ஏற்படும் மாநிலமாக அசாம் திகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அந்த மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதி திகழ்ந்து வருகிறது. இமயமலையின் உருவாகும் இந்த நதி உலகின் மிக அதிக மழைப்பொழியும் பகுதிகளான அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களின் வழியே வங்கதேசம் சென்று அங்கு வங்கக்கடலில் சேர்க்கிறது.
இந்த அதீத மழைப்பொழிவு காரணமாக ஆசியாவிலேயே இரண்டாவது அதிக நீர்வரத்து கொண்ட நதியாக பிரம்மபுத்திரா நதி திகழ்ந்து வருகிறது. கங்கை நதியை விட இரண்டு மடங்கு அதிக நீர் பிரம்மபுத்திரா நதி வழியே கடலில் கலப்பதால் மழைக்காலங்களில் அசாம் மற்றும் வங்கதேசத்தில் பேரழிவுகள் ஏற்படுகிறது.

அசாம்
அந்த வகையில் இந்த ஆண்டும் பருவமழை காலத்தில் பிரமபுத்திராவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்ததை விட கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கனமழை, வெள்ளம், கட்டட இடிபாடுகளால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 99 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
அதிலும் அசாமில் உள்ள தர்ரங் (Darrang) மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியுடன் சேர்ந்து அதன் துணை நதிகளான மங்கல்தாய் (Mangaldai), புஷிமாரி (Puthimari) மற்றும் நோவா நதிகளில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை, வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளதால் அந்த கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்றே தெரியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பான உயரமான பகுதிகள், தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகள் மற்றும் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
