எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினரும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதலமைச்சர்தான் காரணம் என்றும், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும், கர்நாடகா முதலமைச்சரபாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகளை முதலமைச்சர் விஜய் சந்தித்தாரா? என்று கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக்கூட உச்சரிக்காதவர் முதலமைச்சர் விஜய் என்று விமர்சித்தார். அப்போது தொண்டர்கள் சிலர், ஒரு பெயரைச்சொல்லி கூச்சலிட்டனர். அப்போது உதயநிதி பேசிய வார்த்தை சர்ச்சைக்குரியதாக மாறியது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின்பேரில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சை காவல்துறையினர், இன்று காலை அவரது வீட்டில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், போலீஸ் வாகனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கிருந்த திமுகவினர் பலரும் வேனை மறித்து முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே, போலீஸ் வாகனத்தில் இருந்தபடி புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த உதயநிதி, ”காவிரி விவகாரம் குறித்து நான் பேசிய அனைத்து விஷயங்களையும் திசை திருப்பிவிட்டு, இதனை பூதாகரமாக்கிவிட்டனர்” என்று தெரிவித்தார்.
மேலும், தான் பேசாத ஒன்றை பேசிவிட்டதாக பொய்ச் செய்தி பரப்புகின்றனர் என்று கூறிய உதயநிதி, போலியான ரீல்ஸ்களை பரப்புவதில்தான், இந்த அரசு சிறந்து விளங்குகிறது என்றும் விமர்சித்தார். இதையடுத்து, போலீஸ் வாகனத்தை அங்கிருந்த திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், உதயநிதி கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த திமுக எம்.பி-க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து, திருச்சி, தேனி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
