இந்தியாவில் உள்ள 19 மாநிலங்களில் இயற்கையின் கோரத்தாண்டவம் எப்படி இருக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்று இரு மழைப்பொழிவு பருவங்கள் இந்தியாவில் உள்ளது. இதில், தென்மேற்குப் பருவமழைக்கான காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், வடகிழக்குப் பருவமழைக்கான காலம், அக்டோபர் முதல் டிசம்பம் வரையிலும் உள்ளது. வழக்கமாக வடகிழக்குப் பருவமழைதான் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பையும், வெள்ளத்தையும் ஏற்படுத்தும். ஆனால், மாறிவரும் காலநிலை மாற்றத்தால், தற்போது தென்மேற்குப் பருவகாலத்திலும் மிக அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது.
அஸ்ஸாம், குஜராத் ஆகிய மாநிலங்களில், ஏற்கெனவே கடுமையான மழை பொழிந்து, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் அடுத்த 7 நாட்களில் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு, வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, பீகார், உத்தரகான்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Rain
இதுமட்டுமின்றி, பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்களிலும், மிகக் கடுமையான மழைப்பொழிவு மற்றும் புயல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, டெல்லி, நொய்டா, குருகிராம், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகான்ட், பஞ்சாப், பீகார், ஜார்க்கன்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட மொத்தம் 19 மாநிலங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகான்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிடும் முன்பு வானிலை மற்றும் போக்குவரத்து நிலவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
