இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஜவுளி, தோல், கடலுணவு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தினால் தமிழகத்துக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும் என பிரிட்டன் தூதரக அதிகாரி சுதாபா சௌத்ரி தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், இந்த ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்தில் முன்பு 10–12 சதவீதம் சுங்கவரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இனி 1,100க்கும் மேற்பட்ட ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களை இனி சுங்கவரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்

India, UK trade pact
இதனால் திருப்பூர், கோவை போன்ற ஜவுளி ஏற்றுமதி மையங்களுக்கு விதிமுறைச் செலவுகள் குறைவதோடு தாமதங்கள் தவிர்க்கப்பட்டு சந்தையை விரைவாக அடைய வாய்ப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மின்சார வாகனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் கூட்டு முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் அதிகரிக்கும் எனத் தெரிவித்த அவர், சென்னை– ஸ்ரீபெரும்புதூர் வாகன உற்பத்தி மையம் மற்றும் கோவை பொறியியல் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் சுதாபா சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், தோல் பொருட்கள் மற்றும் காலணிகளுக்கு முன்பு 16% வரை இருந்த சுங்கவரி, முழுமையாக நீக்கப்படும் என்றும், இதன்மூலம் வேலூர் மற்றும் ஆம்பூர் தோல் தொழில் மையங்கள் வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று இறால், டூனா உள்ளிட்ட கடல்சார் உணவுப் பொருட்களுக்கு 4.2% முதல் 8.5% வரை இருந்த சுங்கவரி நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ள பிரிட்டன் தூதரக அதிகாரி சுதாபா சௌத்ரி, இதன்மூலம் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இருந்து கடலுணவு ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

India, UK trade pact
தமிழகத்துக்கான நன்மைகள் என்ன?
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 90% சுங்கவரி பிரிவுகளும் தளர்த்தப்படும். திருப்பூர், கோவை போன்ற ஜவுளி ஏற்றுமதி மையங்கள் சந்தையை விரைவாக அடைய வாய்ப்பு ஏற்படும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஒளியிழை கேபிள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்கவரி நீக்கப்படும். தோல் பொருட்கள் மற்றும் காலணிகளுக்கு முன்பு 16% வரை இருந்த சுங்கவரி முழுமையாக நீக்கப்படும்.
