ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் ஆயிரம் ஏவுகணைகள் தயார் என மிரட்ட, அரசுத் தொலைக்காட்சியில் மொஜ்தபா காமேனி தந்தையின் இரத்தத்திற்கும் தியாகிகளின் உயிரிழப்புக்கும் பழிவாங்குவோம் என பேசியுள்ளார்.
பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதால், போர் தொடங்கியது. முதல் நாளிலேயே ஈரான் உச்சத் தலைவர் கொல்லப்பட்டார். ஜூன் 17 அன்று போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானும், அமெரிக்காவும் மின்னணு முறையில் கையெழுத்திட்டன. இதற்கிடையே கொல்லப்பட்ட உச்சத்தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை 4 ஆம் தேதி துவங்கி ஊர்வலமாகச் சென்று மஷ்ஹத் (Mashhad) நகரில் ஜூலை 9 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கின்போது டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரது மரணமே பதிலடி என்று ஈரான் மக்கள் பதாகைகளையும் சுவரொட்டிகளையும் பேனர்களையும் வைத்திருந்தனர்.

Trump & Masoud Pezeshkian
ஜூலை 8 அன்று ஈரான் உடனான இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரான் மீது தீவிர தாக்குதலையும் தொடங்கியது .
இந்தச் சூழலில் ட்ரம்ப் தனது சமூக ஊடகமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ஈரான் தம்மைக் குறிவைத்தால் அந்நாட்டின் மீது மிகப்பெரிய இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரானை நோக்கி ஏவுவதற்காக 1,000 ஏவுகணைகள் ‘லாக்டு அண்ட் லோடடு’ (locked and loaded) என்றும், தேவைப்பட்டால் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பாயும் என்றும் தெரிவித்திருந்தார்.

trump
சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரானின் தற்போதைய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையை ஈரானியர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் இரண்டு போர்களிலும் உயிரிழந்த அனைத்து தியாகிகளின் புனிதமான இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் என்றும் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எங்கள் தேசத்தின் விருப்பமாகும்; இது நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் கூறினார்.
ஈரான் டிரம்ப்பைக் குறிவைத்தால் என்ன நடக்கும்?
ஒரு அமெரிக்க அதிபர் படுகொலை செய்யப்பட்டால், இராணுவப் பதிலடிக்கு வழிவகுக்கும் எந்தவொரு தன்னிச்சையான அமைப்போ அல்லது முன் அனுமதி பெற்ற அமைப்போ அமெரிக்க அரசாங்கத்திடம் இல்லை.

JD vance & Trump
டிரம்ப் கொல்லப்பட்டால், 25வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 1947ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரம் அவரது வாரிசுக்குச் செல்லும். அந்தச் சூழ்நிலையில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடனடியாகத் தலைமைத் தளபதியாகி, எந்தவொரு இராணுவப் பதிலடி குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெறுவார்.
அதன்பிறகு, டிரம்ப் கோரிய நடவடிக்கையை வான்ஸ் செயல்படுத்தத் தேர்வு செய்யலாம். இருப்பினும், அவர் அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் இருக்கவோ அல்லது வேறுவிதமாகப் பதிலளிக்கவோ முடிவு செய்யலாம்.
பதிலடியாக அணு ஆயுதத் தாக்குதல் அல்லது மற்றொரு பெரிய பேரழிவு போன்ற சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான விரிவான அரசாங்கத் திட்டங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அதிபர் அத்தகைய நடவடிக்கைக்குத் தயாராகும்படி இராணுவத்திற்கு அறிவுறுத்தியிருந்தாலும் கூட ஒரு அதிபர் இறந்த பிறகு உடனடியாகப் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்குவது அந்தத் திட்டங்களில் இல்லை என்றும் கூறப்படுகிறது
