பாலஸ்தீனுக்கு அளித்த உறுதியான ஆதரவும், இஸ்லாமிய உலகில் கொண்டிருந்த செல்வாக்கின் காரணமாகவே காமேனியை அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டாக படுகொலை செய்ததாக ஹவுதி மூத்த அதிகாரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானில் உச்சத் தலைவராக விளங்கிய அயதுல்லா அலி காமேனி போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து போர் நடந்த காரணத்தால் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கான நிகழ்வு ஜூலை 4 ஆம் தேதி ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ‘கிராண்ட் மொசல்லா’ (Grand Mosalla) வளாகத்தில் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிந்தது. இறுதிச் சடங்குகளில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து கண்ணீர், மந்திர முழக்கங்கள், கருப்பு நிற உடைகளில் கடலென திரண்டிருந்த காமேனியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே பாலஸ்தீன விவகாரத்திற்கு காமேனி அளித்த ஆதரவு மற்றும் இஸ்லாமிய உலகம் முழுவதும் அவருக்கு இருந்த பரவலான செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாகவே, ஈரானின் முன்னாள் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியை அமெரிக்காவும் இஸ்ரேலும் படுகொலை செய்ததாக அன்சாருல்லா அமைப்பின் (ஹவுதி குழு) மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Ali Khamenei’s funeral procession
ஈரான் அரசுக்குச் சொந்தமான IRNA செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானில் நடைபெற்ற காமேனியின் இறுதிச் சடங்கு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது முகமது அல்-புகைதி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
காமேனியின் செல்வாக்கு ஈரானின் அரசியல் மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி பரவியிருந்தது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை, கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை நாடும் பல நாடுகளுக்கு, காமேனி ஒரு எதிர்ப்பு மற்றும் விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்சாருல்லா என்ற அமைப்பு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர் அமைப்பின் அதிகாரப்பூர்வ பெயராகும். இது மத்திய கிழக்கு மற்றும் செங்கடல் பகுதியில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகச் செயல்படும் ஒரு முக்கிய அமைப்பாகும்.
