தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தற்போதைய தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிகவின் மாநில முதன்மை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(19) பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் கொத்தனார் வேலை செய்து வந்ததார். இவர் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவே இரு வீட்டாருக்கும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், காதலித்த இருவரும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்திருக்கின்றனர். பார்த்திபன் உறவினர்கள் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், பெண் வீட்டார் அதை மறுத்திருக்கின்றனர்.

இந்தசூழலில் தான், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன், உறவினர்கள் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தமிழக அரசு விரைவாக ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனிச்சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என விசிகவின் மாநில முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றக் கோரி சட்டப்பேரவையில் விசிக சார்பில் வலிமையாகக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் இதற்கான ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் 18, 2026 அன்று, தோழர் ‘எவிடென்ஸ்’ கதிர் மற்றும் விசிக தோழர்களுடன் இந்த ஆணையத்தின் முன் ஆஜராகி, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தின் தேவை குறித்த விரிவான ஆவணங்களை விசிக வழங்கியது. கடந்த வாரம் (ஜூன் 25, 2026) ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மீண்டும் ஆணையத்தைச் சந்தித்து விசிக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

சாதி
ஆணையத்தை விசிக தரப்பு இருமுறை சந்தித்த இந்த குறுகிய 3 மாத இடைவெளியில் மட்டும் தமிழ்நாட்டில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டதாக அக்கட்சியின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. “அதே உறுதியுடன் இப்போது தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தமிழ்நாட்டில் ஆணவக்கொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
