இது அவருக்கு கூடுதல் மன உறுதியையும் பாதுகாப்பையும் வழங்கும் என இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைக் கலக்கிவரும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு (Vaibhav Sooryavanshi), ஐசிசி (ICC) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, அதிக ரன் எடுத்த 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, அடுத்து இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் முத்தரப்பு தொடரில் இந்திய ஏ (India A) அணியில் இடம்பிடித்து மிரட்டிய அவர், அடுத்து இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆசிய தொடருக்கான இந்திய அணியிலும் விளையாட உள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்து டி20 தொடரின்போது இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமை முழுமையாகப் பயன்படுத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, 16 வயதுக்குட்பட்ட வீரர்கள் மூத்த வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
இதன் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒவ்வொரு மைதானத்திலும் தனி மாற்று அறை வழங்கப்பட இருக்கிறது. போட்டிகள் நடைபெறும் நேரத்திலும், அணி ஆலோசனைக் கூட்டங்களின்போதும் மட்டுமே அவர் இந்திய டிரஸ்ஸிங் ரூமிற்குள் அனுமதிக்கப்படுவார். போட்டிக்கு முன்னும்பின்னும் உடை மாற்றும் நேரங்களில் அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வைபவ் சூர்யவன்ஷி
இங்கிலாந்து விளையாட்டுப் போட்டிகளில் இது வழக்கமான நடைமுறை என்றாலும், இந்தியாவில் இதுபோன்ற விதிகள் இல்லாததால் வைபவ்வுக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், வைபவ்-இன் இளம் வயதைக் கருத்தில் கொண்டு, வழக்கமான நெறிமுறைகளைத் தளர்த்தி, அவரது பெற்றோரும் இந்தத் தொடரின்போது அவருடன் பயணம் செய்ய ஐசிசி அனுமதித்துள்ளது. இது அவருக்கு கூடுதல் மன உறுதியையும் பாதுகாப்பையும் வழங்கும் என இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.
