சிவகங்கையில் போலீஸ் காவலில் மரணமடைந்த ஆகாஷ் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த மார்ச் 8ஆம் தேதி காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகாஷின் உடற்கூராய்வு அறிக்கையில், 28 காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காலீஸ்வரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களின் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து ஆகாஷின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆகாஷ் டெலிசன்
ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில், 50 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், 100 நாட்களுக்கும் மேலாக உடற்கூராய்வு செய்யப்பட்ட உடல் அங்கு வைக்கப்பட்டிருப்பதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள், மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உத்தரவில் எந்த திருத்தத்தையும் கோரவில்லை. பொதுநலன் கருதி உடலை பெற்ற அடக்கம் செய்ய உத்தரவிடவே நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, “இறந்தவரின் உடலை இவ்வளவு காலம் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இறந்தவருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். பெற்றோர் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். இல்லையென்றால், அரசு தரப்பில் இருந்தே அடக்கம் செய்யப்படும் என எச்சரித்திருந்தார். எனினும், ஆகாஷின் பெற்றோர் அவரின் உடலை பெற்றுக் கொள்ளாத நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் 102 நாட்களுக்குப் பிறகு, ஆகாஷ் டெலிசனின் உடல் மதுரை தத்தனேரி மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தகனம் செய்வதற்கு முன்பாக, ஆகாஷ் டெலிசன் உடலுக்கு அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.
