அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கம் தொடங்கப்பட்டது. அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் கலந்துகொண்ட கூட்டத்தில், அவருக்கு அறை விழுந்தது. இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு இன்று பதில் அளித்துள்ளார் அபிஜித்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கம் தொடங்கப்பட்டது. அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். இந்தச் சூழலில்தான், நீட் வினாத்தாள் கசிவு, போட்டித் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு விவகாரம் போன்ற கல்வித்துறையில் நிகழ்ந்திருக்கும் முக்கியப் பிரச்னைகளை சுட்டிக்காட்டியதுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாநிலம்தோறும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக மேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அவரை ஓங்கி அறைய முயன்று, தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்தச் சம்பவம் குறித்து பேசிய அபிஜித், “ஜெய்ப்பூரில் நடந்தது அதிகரித்து வரும் வேலையின்மையின் விளைவாகும். அந்த நபருக்கு ஒரு நல்ல வேலை இருந்திருந்தால், அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார். சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு முறையான வழிகள் இல்லாததால், இளைஞர்களுக்கு இதுபோன்ற செயல்களைச் செய்ய 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அத்தகையவர்களுக்கு சிறந்த வேலைகளை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
