தற்போது அடுத்த தேர்தல் வாந்தால் கூட திமுகவே வெற்றிபெறும் என முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார்.
Summary
தவெக ஆட்சியின் ஒரு மாத கால செயல்பாடுகள் மக்களுக்காக நடைபெறும் ஆட்சியாகத் தெரியவில்லை என்று பொன்முடி விமர்சித்தார். அடுத்த தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அண்ணாமலை தொடங்கிய இயக்கம் குறித்து, அனைவருக்கும் இயக்கம் தொடங்க உரிமை உண்டு, காலம் சென்றால் அதன் நிலை தெரியும் என்றார்.
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் அமைந்துள்ள மறைந்த விவசாய துறை அமைச்சர் ஏஜி கோவிந்தசாமியின் மணி மண்டபத்தில் அவரது 108 பிறந்த நாளை முன்னிட்டு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கோவிந்தசாமியின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவ படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, மறைந்தும் மறையாமலும் அனைவரின் உள்ளத்தில் ஏ. கோவிந்தசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார். திமுக சார்பில் ஏஜி கோவிந்தசாமியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. கோவிந்தசாமியின் மணி மண்டபத்தினை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பேரறிஞர் அண்ணா துரை அமைச்சரவையில் விவசாய துறை அமைச்சராக கோவிந்தசாமி சிறப்பாக பணியாற்றியவர், அவருடைய பெயரில் திண்டிவனத்தில் அரசு கலைக்கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் இருக்கும் வரை கோவிந்தசாமியின் புகழ் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தவெகவின் ஒரு மாத கால ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தவெக ஆட்சியை மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது மக்களுக்காக நடைபெறும் ஆட்சியாக தெரியவில்லை, எப்பொழுது அடுத்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்று பேசினார்.
பொன்முடி
மேலும், அண்ணாமலை இயக்கம் தொடங்கி இருப்பது குறித்து பேசியவர், எல்லாருக்கும் இயக்கம் தொடங்கும் உரிமை உண்டு, அண்ணாமலை தொடங்கி இருக்கிறார், போக போக தெரியும் என தெரிவித்தார்.
