
இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரி மாற்றங்கள், நாட்டின் பொருளாதாரத்தில் புதிய உயர்வை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் மூலம், சாமானிய மக்களின் கைகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி கூடுதல் பணம் சேமிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த சேமிப்பு, அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பால், மக்கள் மற்ற பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்க செலவிடுவதற்கு வழிவகுக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 60 சதவீதம் நுகர்வு செலவுகள் மூலம் ஏற்படுவது என்பதால், இந்த வரி குறைப்பு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு முக்கிய அடியாகக் கருதப்படுகிறது. ஆனால் இதை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய விஷயம் என தமிழ்நாட்டு முதல்வர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டர பதிவில்,” ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்” என மாண்புமிகு பிரதமர் அவர்கள் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.
மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?
தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!” என தனது பதிவை ஹிந்து வெளியிட்ட ஒரு கார்டூன் படத்துடன் பதிவிட்டு உள்ளார்.
மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி அமைவதற்கு முன்பே காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு பல முறை ஜிஎஸ்டி வரி அமைப்பை நாடு முழுவதும் கொண்டு வர முயற்சி செய்தது. இதற்காக பணிகள் 2000ஆம் ஆண்டில் அசிம் தாஸ்குப்தா கமிட்டி வெளியிட்ட முதல் ஆலோசனை கடிதத்தில் இருந்து இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்வது குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
2006 பட்ஜெட்டில் அப்போதைய நிதியைச்சராக இருந்த ப.சிதம்பரம் 2010ஐ இலக்காக கொண்டு ஜிஎஸ்டி கொண்டு வரலாம் என அறிவித்தார், இதன் பின் 2009ஸ் பிரனாப் முகர்ஜி, 2011ல் பிரதமர் மன்மோகன் சிங் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்துவது குறித்து மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2013ல் நிலைக்குழு ஜிஎஸ்டி குறித்து அறிக்கையை சமர்ப்பித்தது.
ஆனால் 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி 0,5,12,18,28 வரி பலகையில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது, இதோடு Sin Tax, செஸ் ஆகியவையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது அதிகப்படியான வரி என அப்போதைய காலக்கட்டத்திலேயே காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதை நினைவுப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
தப்போதைய ஜிஎஸ்டி குறைப்பு மூலம் மக்களின் மாதாந்திர செலவில் முக்கியமான 30 நுகர்வு பொருள்களில் 11 பொருட்களின் விலையை குறைக்கும். இதனால், சராசரி ஜிஎஸ்டி விகிதம் 11 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறையும் என கிரிசில் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நுகர்வின் அளவு, வர்த்தகத்தின் அளவு படிப்படியாக உயர்த்தும் என தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வரி குறைப்பு அரசுக்கு ரூ.48,000 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் எளிமையான வரி முறையால் இணக்க செலவுகள் குறைவதால், இந்த இழப்பை ஈடுகட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. மேலும் இந்த இழப்பை சரி பாதியாக மாநில அரசும் ஏற்க வேண்டிய நிலை உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.