வேலைக்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
Summary
2011-16 கால அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க ஆளுநரிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்த கோப்பு ராஜ் பவனில் பரிசீலனையில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

Senthil Balaji
இந்த வழக்கில் ஜூன் 2023-இல் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், செப்டம்பர் 2024-இல் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தாலும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் அமைச்சராக இருந்ததால், மாநில அரசின் விசாரணை அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. இதற்காக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை ஆளுநருக்கு கடிதம் எழுந்திருந்தது. இந்தச் சூழலில் இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது.
அமலாக்கத்துறை அனுப்பியுள்ள மூன்று பக்கங்கள் கொண்ட கடிதம் மே 15ஆம் தேதி அனுப்பப்பட்டது. தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணைக் குறிப்புகள் மற்றும் புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது.
‘தமிழக அரசு ஆளுநரிடம் கோரிக்கை
இந்நிலையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர அமலாக்கத் துறைக்கு (ED) அனுமதி அளிக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரிடம் தமிழக அரசு கோரியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay & Governor Arlekar
முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த வாரத் தொடக்கத்தில் அதற்கான கோப்பு, ஆளுநர் மாளிகைக்கு (ராஜ் பவன்) அனுப்பப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறின. அவர் அமைச்சராக இருந்ததால், வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. அவர் கோப்புக்கு ஒப்புதல் அளித்தால், விரைவில் அரசு ஆணை பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
