’கருப்பு’ மிகப்பெரிய வெற்றி. அதில் எனக்குப் பெரிய சந்தோசம். அந்தப் பையனுக்கு நான்கு ஐந்து வருடங்களாக பெரிய பின்னடைவு. இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
`அவள் பெயர் தமிழரசி’, `விழித்திரு’ போன்ற படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் தற்போது கஸ்தூரி ராஜா நடிப்பில் `ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். மே 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “ராமுடைய இரண்டு நாள் டார்ச்சருக்குப் பிறகு இன்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். ரொம்ப நாளுக்குப் பிறகு தனியாக அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்தேன். நான் சிறுவயதில் வளர்ந்தது திண்டுக்கல். சின்ன வயதின் ஞாபகங்கள் இருக்குமல்லவா? அப்படி எனக்கு இருக்கும் ஒரு ஞாபகம், என்னுடைய முதல் காயம். என் அம்மா குளிக்கப் போகும்போது செம்பில் இருக்கும் காசில் 10 பைசா திருடுவேன். ஒருநாள் மாட்டிக்கொண்டேன். என்னைப் போட்டு அடித்தார், அதுவும் போதாது என தீக்குச்சியால் சூடு வைத்தார். அதுதான் என்னுடைய முதல் காயம். அந்த 10 பைசா எதற்கு திருடுவேன் என்றால் வீட்டை ஒட்டி உள்ள கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவேன். அது ஓர் இஸ்லாமியரின் கடை. இதன்பிறகு இரண்டு மூன்று நாட்கள் அந்தக் கடைக்கு நான் போகவில்லை. அவரே வீடு தேடி வந்து என்ன நடந்தது என தெரிந்துகொண்டார். பின்னர், ஒருநாள் அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் சாப்பாடு வைத்திருந்ததால் ஓர் உருண்டை எனக்கு எடுத்துக் கொடுத்தார். அப்போது அவர், ’நீ என்னிடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேனே’ என்றார். அவர் கொடுத்தது அன்னம் மட்டுமல்ல… அறிவு, கருணை. அவர்தான் நான் வாழ்க்கையில் சந்தித்த முதல் புத்தர்” என்றார்.
தொடர்ந்து பேசிய் அவர், “இரண்டு நாட்கள் முன்பு வெளியான ’கருப்பு’ மிகப்பெரிய வெற்றி. அதில் எனக்குப் பெரிய சந்தோசம். அந்த பையனுக்கு நான்கு ஐந்து வருடங்களாக பெரிய பின்னடைவு. இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். அது ஹிட் என்றதும் எனக்கு மகிழ்ச்சி. அது ஓடக்கூடிய படம். இது ஓட வேண்டிய படம்.
இந்திய திரையுலகமே கமர்ஷியல் படங்களை நோக்கி இயங்கும் இடம். அதற்குள் மீரா கதிரவன் போன்றோர் போர் செய்து கொண்டே இருக்கிறார்கள். நான் இப்போது மிக உஷார் ஆகிவிட்டேன். ஒரு படம் எனக்காக… இன்னொரு பாடம் என் பாக்கெட்டுக்காக என படம் எடுக்கிறேன். ஆனால், இந்தப் படத்தை மீரா அவனுடைய தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறான். இதுபோன்ற ஒரு படத்தை எந்த ஏஐயாலும் உருவாக்க முடியாது. இந்தப் படத்தில் நடித்திருந்தவரை எங்கோ பார்த்திருக்கிறேன் என தோன்றியது. பின்னர்தான் கஸ்தூரி ராஜா என புரிந்தது. தனுஷைவிட நூறுமடங்கு நன்றாக நடித்திருக்கிறீர்கள் சார். அவர் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்தான். ஆனால், நீங்கள் அதை எல்லாம் தாண்டிவிட்டீர்கள். இது மிகவும் அழகான படம், இப்படத்தின் ஒரு வசனத்தைச் சொல்லி முடிக்கிறேன். அல்லாஹ் லேசாக்கிடுவார் என ஒரு வசனம் வருகிறது. நம்மை சிவனும், கிறிஸ்துவும், புத்தனும் அந்த மகா அல்லாஹ்வும் லேசாக்கட்டும்” என்றார்.
