சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
Summary
விஜய் தலைமையிலான தவெக ஆட்சியால் தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியிருக்கிறது. அதிமுக பிளவு, திருமாவளவனின் திமுக-அதிமுக கூட்டணி மற்றும் முதல்வர் பதவி குறித்த பேச்சு என சர்ச்சைகள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில், ஸ்டாலின் சமூக ஊடகங்களில் பரவும் பொய்களுக்கு எதிராக உண்மையை வெளிப்படுத்துவோம் எனக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருப்பது புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளை ஓரங்கட்டி விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைப்பிடித்ததிலிருந்து தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தமிழகத்தில் வளர்ச்சியை கண்டுவந்த தேசிய கட்சியான பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மறுபக்கம் அதிமுக கிட்டத்தட்ட இரண்டாக பிளவுபட்டிருக்கிறது.

CM Vijay
இதெல்லாம் ஒருபுறம் இருக்கும்சூழலில் சமீபத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கொடுத்திருக்கும் நேர்காணல் புதிய சர்ச்சையை பற்றவைத்துள்ளது. தன்னுடைய நேர்காணலில் திமுக-அதிமுக கூட்டணி குறித்து பேசியது உண்மை தான் என்றும், தன்னை முதல்வராக்க பேசப்பட்டதாகவும் அவர் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன்
இந்தசூழலில் தான் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவு கவனத்தை பெற்றுள்ளது.
திருமாவளவன் நேர்காணலுக்கு பிறகு திமுக-அதிமுக கூட்டணி குறித்த பேச்சுக்கள் மீண்டும் சமூகவலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்தசூழலில் தான் சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பினால் உண்மையை போட்டுடைப்போம் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப்பதிவு யாரைச் சொல்கிறார் ஸ்டாலின் என்ற கேள்வியை எழுப்புகிறது.
எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
