தமிழகத்தில் அவர் முதல்வரானதிலிருந்து என்னை ஒப்பிட்டு விமர்சிக்கிறார்கள் என பவன் கல்யாண் பேசியுள்ளார்
Summary
தமிழகத்தில் விஜய் கட்சி தொடங்கியபோது, பவன் கல்யாணின் ஆரம்பத் தோல்விகளை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் எதிர்பாராத வகையில் விஜய் 108 இடங்களில் வென்று முதல்வரானதால், இப்போது அவரை ஒப்பிட்டு பவனை குறைசொல்லும் குரல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பதிலளித்த பவன், தமிழ்நாடு-ஆந்திரா அரசியல் சூழல்கள் வேறுபட்டவை என வலியுறுத்துகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலில் கட்சி தொடங்கியபோதும், அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்தபோதும் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் உடனே ஒப்பிடப்பட்டார். நடிகர்களுக்கு கூட்டம் கூடும் அது ஓட்டாக மாறாது என்று முதலில் விஜய் விமர்சிக்கப்பட்டார், அதற்கு காரணம் பவன் கல்யாணும் முதல் தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வியை தழுவியிருந்தார்.

CM Vijay
தற்போது ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் இருந்தாலும், அவருடைய அரசியல் வருகை அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்திருக்கவில்லை. இதனாலேயே விஜய் கட்சி தொடங்கியபோதும் அவர்களின் பெயரை சொல்லியே விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் விஜய் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்து முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிறார். இந்தசூழலில் தான் விஜய் முதல்வரானதை ஒப்பிட்டு பவன் கல்யாணை பல தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாடும், ஆந்திராவும் வேறு..!
மங்களகிரியில் உள்ள ஜனசேனாவின் தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய பவன், விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “தமிழ்நாடு தேர்தல் நடந்து அவர் முதலமைச்சரானதிலிருந்து, மக்கள் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். நமது அண்டை மாநிலத்தில், ஒரு நடிகர் கட்சியைத் தொடங்கி முதலமைச்சரானார். அதன் பிறகு, ஆந்திரப் பிரதேசத்திலும் நான் அதையே செய்திருக்க வேண்டும் என்று பலர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.

பவன் கல்யாண்
அவர்கள் அப்படி சொல்வது பக்கத்து தெருவில் திருமணம் நடந்தால், அது தங்கள் வீட்டு திருமணம் போல சிறுபசங்க எல்லாம் குஷி ஆகுற மாதிரி இருக்கிறது. ஆந்திராவோட நிலைமை வேறு தமிழ்நாடோட நிலைமை வேறு. அவங்க சொன்ன மாதிரி தான் நான் 2019ல போட்டியிட்டேன். என்ன நடந்தது? என் அமைச்சர்களே என் கூட நிற்கவில்லை. அதனால மத்தவங்க கூட என்ன ஒப்பிடாதீங்க” என பேசியுள்ளார்.
