கடந்த 4 வருடங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை இன்று அதிரடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் சுமார் 1 மாதம் நீடித்தது. இந்த போரின் தொடர்ச்சியாக ஈரான் உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. இந்த நிலைமையைச் சமாளிக்க வெனிசுலா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் விலைக்கு இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன. அதே நேரம் 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு விரும்பவில்லை.

கச்சா எண்ணெய்
அதேநேரத்தில், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். மேலும், பிரதமர் மோடி முதல் அமித் ஷா உள்ளிட்ட சில அமைச்சர்கள் வரை தங்களது பாதுகாப்பு வாகனங்களைக் வெகுவாகக் குறைத்திருந்தனர்.
இந்த நிலையில் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்வதால் நாளொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள இயலாது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே 5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறியுள்ளது பெரும் கவனம் ஈர்த்தது.

பெட்ரோல் டீசல்முகநூல்
இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.95.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 வருடங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை இன்று அதிரடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
