நாட்டில் நிலவும் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில், பள்ளிகள் சிறிது காலத்திற்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Summary
குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி சுமை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி, பள்ளிகளில் தற்காலிகமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும், நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை முறையை பின்பற்றவும், வெளிநாட்டு திருமணங்களை தவிர்த்து இந்தியாவிலேயே விழாக்கள் நடத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. பாரசீக வளைகுடாவை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் ஹார்முஸ் நீர்வழிப்பாதை வழியாகவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் செல்கிறது. இப்பகுதியில் பல வாரங்களாக நீடிக்கும் மோதலும் நிலையற்ற தன்மையும் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைத்து, சரக்கு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தி, எண்ணெய் டேங்கர்களுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கடுமையாக அதிகரித்துள்ளன.

சிலிண்டர் விலை உயர்வு
இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதுடன் கடுமையான விலையயும் மத்தியரசு உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக, ஹோட்டல்களை மட்டுமே நம்பி சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை செய்து வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தசூழலில் தான், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறும் பிரதமர் மோடி தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடும் ஏற்படவுள்ள சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, எரிபொருள் சேமிப்பு மற்றும் அந்நியச் செலாவணி பாதுகாப்பு குறித்த சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எரிபொருட்களை இறக்குமதி செய்ய அதிக அளவில் அன்னிய செலாவணி தேவைப்படுகிறது. தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, வாகனங்களை இயக்க செலவழிக்கப்படும் எரிபொருளைச் சேமிக்க, பள்ளிகள் கொரோனா பெருந் தொற்று காலம் போல மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை சிறிது காலத்துக்கு நடத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று சவாலை நாம் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொண்டதைப் போலவே தற்போதைய பொருளாதார சவால்களையும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும்.

மோடி
சமீபகாலமாக அதிகரித்து வரும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்தும் கலாச்சாரத்தைத் தவிர்த்து, இந்தியாவிலேயே சுப நிகழ்ச்சிகளை நடத்த முன்வரவேண்டும். பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும், சுயசார்பு இந்தியாவின் இலக்கை எட்டவும் பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோவிட் காலத்தைப் போலவே இப்போதும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் பேசிய பிரதமர், சமையல் எண்ணெய்யை குறைத்துக் கொள்ள வேண்டும். நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை முறையை பின்பற்ற வேண்டும். தங்க நகைகள் வாங்குவதை ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில், நேற்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். அதிக முக்கியத்துவம் உள்ளதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த விவகாரம் குறித்து மோடி பேசி உள்ளார் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
