ஈரானிய ஆளில்லா விமானங்களை ஆவியாக்கும் திறன் கொண்ட ‘ஐரன் பீம்’ (Iron Beam) எனும் லேசர் ஆயுதத்தை இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியுள்ளது.
Summary
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தற்காலிக இடைநிறுத்தத்தில் இருக்கும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. ஈரான், UAE மீது நூற்றுக்கணக்கான ஏவுகணை, ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியபோது, இஸ்ரேல் பராக், ‘ஐரன் டோம்’ (Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பையும் அனுப்பியிருந்தது.
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்து தாக்கியும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன.

iron beam laser
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளது. இந்த இடைபட்ட நாட்கள் அமெரிக்கா தனது குறைந்து போன ஆயுத திறனை நிரப்ப எடுத்துக் கொள்ளப்பட்ட நேரமாக கருதப்படுகிறது. குறைந்த செலவில் எதிரிகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்திய ஈரானின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வளைகுடா நாடுகளும் அமெரிக்காவும் திணறியது என்று கூறப்படுகிறது.
போர் நடந்த போது ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மீது 500-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 2,000 ட்ரோன்களையும் ஏவியிருந்தது. இந்த தாக்குதல்களை சமாளிக்க இஸ்ரேல் அந்த வளைகுடா நாட்டிற்கு தனது பராக் மற்றும் ஸ்பைடர், ஐரன் டோம் (Iron Dome) என்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியிருந்தது.

iron beam laser
இந்நிலையில் ஈரானிய குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை ஆவியாக்கும் திறன் கொண்ட ‘ஐரன் பீம்’ (Iron Beam) எனும் லேசர் ஆயுதத்தை இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியுள்ளது. இது முதன்முதலில் லெபனானிலிருந்து வந்த ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகளுக்கு எதிராக இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டது.
20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும், குறிப்பாக ஈரான் பயன்படுத்தும் விலை குறைந்த ஷாஹெட்ஸ் ட்ரோன்களிடமிருந்தும் தற்காத்துக் கொள்வதற்காக, ‘ஸ்பெக்ட்ரோ’ எனப்படும் ஒரு மேம்பட்ட கண்காணிப்பு அமைப்பையும் இஸ்ரேலிய இராணுவ வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியுள்ளது இஸ்ரேல் . இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஈரானுக்கு மிரட்டல் விடுவதாகவே பார்க்கப்படுகிறது .

iron dome
ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் உறவு
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட நான்கு அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆபிரகாம் உடன்படிக்கைகள் மூலம் நிறுவப்பட்டது . ஆபிரகாம் உடன்படிக்கைகள் என்பது 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவான, இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கும் இடையிலான தூதரக, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை இயல்பாக்கிய தொடர்ச்சியான கூட்டு ஒப்பந்தங்கள் ஆகும்.
