ஐபிஎல்லில் வெளிநாட்டு பயிற்சியாளர் தான் சிறப்பானவர் என்பது போல முன்னாள் இங்கிலாந்து வீரர் பதிவிட்டதால் இந்திய கிரிக்கெட்டர் அஸ்வின் கடுப்பாகி விளாசினார்.
Summary
ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை அஸ்வின் கேள்வி எழுப்புகிறார். ஹேமங் பதானியின் கருத்துக்கு துணைநின்ற அவர், கெவின் பீட்டர்சன் ட்வீட்டை எடுத்துக்காட்டி, SA20 லீக்கில் சிறப்பாக செயல்பட்ட கங்குலி, இந்தியாவிற்கு கோப்பை வென்ற டிராவிட் போன்ற இந்திய நாயகர்கள் ஏன் வெளிநாட்டு அணிகளின் கோச்சாக பரிந்துரைக்கப்படவில்லை என கடும் அதிருப்தி தெரிவித்தார்.
பல ஐபிஎல் அணிகளுக்கு வெளிநாட்டு கிரிக்கெட்டர்களே பயிற்சியாளர்களாக இருந்துவரும் சூழலில், இந்திய பிரான்சைஸ் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களுக்கும், இந்திய பயிற்சியாளருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

2026 ஐபிஎல் அப்டேட்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானியின் கருத்தை தொடர்ந்து, அஸ்வினும் அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுகுறித்த உரையாடலில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பதிவிட்டிருந்த ட்வீட்டை சுட்டிக்காட்டி பேசிய அஸ்வின், ஏன் கங்குலி, டிராவிட்டின் பெயரை ஒருவரும் வெளிநாட்டு தொடர்களுக்கு பரிந்துரைப்பதில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
தன்னுடைய யூடியூப் சேனல் உரையாடலில் பேசியிருக்கும் அஸ்வின், “ சில நாட்களுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு கிரிக்கெட்டர் அடுத்த சீசன் KKR அணிக்கு பிரெண்டன் மெக்கல்லம் கோச்சாக மாறுவார், என் வார்த்தையை குறித்து கொள்ளுங்கள் என ட்வீட் செய்திருந்தார். ஆனால் SA20 லீக்கில் சௌரவ் கங்குலி சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதுவரை யாருமே சௌரவ் கங்குலி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு கோச்சாக போகிறார் அல்லது ராகுல் டிராவிட் இங்கிலாந்து அணியின் ஹெட் கோச்சாக போகிறார் என ஒரு தடவை கூட யாரும் சொன்னது இல்லை.
தற்போது உலக கிரிக்கெட்டின் முன்னணி நாடாக இந்திய கிரிக்கெட் தான் கொடிநாட்டியுள்ளது, ஆனால் நாட்டிலுள்ள தரம் வாய்ந்த இந்தியப் பயிற்சியாளர்கள் இங்கு எங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?” என காட்டமாக பேசினார்.
