தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்தாலும், ‘எஸ்.ஐ.ஆர்’ கணக்கீடு மூலம் உண்மையான மக்கள் பங்கேற்பு வேறு கோணத்தில் வெளிப்படுகிறது
Summary
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்தாலும், ‘எஸ்.ஐ.ஆர்’ கணக்கீடு மூலம் உண்மையான மக்கள் பங்கேற்பு வேறு கோணத்தில் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் 85.15% என்ற சாதனை, புதுச்சேரியில் 91.23% உயர்வு என்பன உண்மையான வளர்ச்சி போன்ற தரவுகளாக தெரிந்தாலும், வெறும் சதவீதத்தை விட வாக்களித்தவர்களின் எண்ணிக்கையே முக்கியம் என்பதை வலியுறுத்துகின்றன.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு பெரும் உயர்வு கண்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 85.15 சதவீத வாக்குப்பதிவு என்பது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த உயர்வு வெறும் ‘சதவீதக் கணக்கா’ அல்லது ‘மக்கள் பங்கேற்பின் அதிகரிப்பா’ என்ற விவாதம் எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிரத் திருத்தம் காரணமாக, வாக்காளர் பட்டியலிலிருந்து போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்விளைவாக, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்ததால், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, வெறும் சதவீதத்தை மட்டும் பார்க்காமல், 2021இல் வாக்களித்தவர்களின் எண்ணிக்கைக்கும் 2026இல் வாக்களித்தவர்களின் எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட வளர்ச்சியை சில தரப்பினர் முன்வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மேலோட்டமாகப் பார்க்கும்போது வாக்குப்பதிவு 12.07 சதவீதம் உயர்ந்து 85.15 சதவீதமாகத் தெரிந்தாலும், வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட ‘எஸ்.ஐ.ஆர்’க்கு பிந்தைய கணக்கீட்டின்படி இந்த உயர்வு 6.05 சதவீதமாக உள்ளது.

எஸ்.ஐ.ஆர் படிவங்கள் சமர்ப்பிக்க 14ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு
இதேபோல் புதுச்சேரியில் 91.23 சதவீத வாக்குப்பதிவு என்பது மேலோட்டமாக 9.03% வளர்ச்சியைப் போலத் தெரிந்தாலும், உண்மையில் கடந்த தேர்தலை விடக் கூடுதலாக வாக்களித்தவர்களின் விகிதம் 5.09 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.
அண்டை மாநிலமான கேரளாவில் மேலோட்டமான வாக்குப்பதிவு உயர்வு என்பது வெறும் 2.27 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தாலும், முந்தைய தேர்தலை விட 9 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் பங்கேற்றதன் மூலம் அதன் உண்மையான வளர்ச்சி என்பது 4.43 சதவீதமாக பதிவாகியுள்ளது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, அசாம் மாநிலத்தில் மேலோட்டமான வாக்குப்பதிவு உயர்வுவெறும் 3.92%ஆக மட்டுமே உள்ளது. ஆனால், ‘எஸ்.ஐ.ஆர்’க்கு பிந்தைய கணக்கீட்டின்படி அம்மாநிலம் 12.04 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
