6 தொகுதிகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் குறித்து பார்க்கலாம் இன்றைய தொகுதி அலசலில்…
இந்திய ஒன்றியத்துடன் இணைந்த முதல் சமஸ்தானம். ஒரு காலத்தில் சோழ, பாண்டிய நாடுகளின் எல்லை… தொண்டமான் மன்னர்கள் ஆண்ட இந்த மண்ணில் சித்தன்னவாசல், திருமயம் போன்ற தொல்லியல் பொக்கிஷங்கள் உள்ளன. தமிழகத்திலேயே அதிகப்படியாக 6,003 நீர்நிலைகளைக் கொண்ட மாவட்டம்; ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மையம் எனப் பல சிறப்புகளை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில், 12.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சி.விஜயபாஸ்கர்
முக்குலத்தோர், முத்தரையர் மற்றும் பட்டியலின மக்கள் பரவலாக இருந்தாலும், அறந்தாங்கியில் இஸ்லாமியர் வாக்குகளும், திருமயத்தில் முத்தரையர் வாக்குகளும் புதுக்கோட்டையில் முக்குலத்தோர் வாக்குகளும்,வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன.
அறந்தாங்கி தொகுதி: திருநாவுக்கரசர் 6 முறை வென்ற அறந்தாங்கி தொகுதியில், தற்போது அவரது மகன் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ- வாக உள்ளார். விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்து 3 முறை வென்று தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளார்.
ஆலங்குடி தொகுதி: அதிமுகவின் கோட்டையாக இருந்த ஆலங்குடி தொகுதியில், தற்போது அமைச்சர் மெய்யநாதன் தொடர்ந்து இருமுறை வென்று திமுகவின் பலத்தை நிரூபித்துள்ளார்.
கந்தர்வகோட்டை தொகுதி 2011-இல் உருவான கந்தர்வகோட்டை தனித் தொகுதி தற்போது சிபிஎம் வசம் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் அதிமுக 14 முறையும், திமுக கூட்டணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2001 முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. இருப்பினும், 2021 தேர்தலில் திமுக கூட்டணி 6-இல் 5 இடங்களை வென்று பலமாகத் திரும்பியுள்ளது. வரலாற்று ரீதியாக பார்த்தால், புதுக்கோட்டை மாவட்டத்தின் தேர்தல் களம் எப்போதும் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டியைக் கண்டுள்ளது.

ஆலங்குடி, அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் தலா 7 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. திருமயம் தொகுதியிலும் திமுக 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. 2011 முதல் உருவான விராலிமலையில் அதிமுக 3 முறையும், கந்தர்வக்கோட்டையில் 2 முறையும் வென்றுள்ளது. காங்கிரஸ் வசம் உள்ள அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில், தற்போது தவெக-வின் வருகை இந்த பாரம்பரிய வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
70 ஆண்டுகால கனவான காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே புதுக்கோட்டை மாவட்ட மக்களின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது. ஆலங்குடி, திருமயத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும், நிலத்தடி நீரைப் பாதிக்கும் 2 லட்சம் ஏக்கர் தைல மரக்காடுகளை அகற்றிப் பசுமையை மீட்டெடுக்கவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

விஜய்
அத்துடன் புதுக்கோட்டை நகரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், கந்தர்வக்கோட்டையின் அடிப்படை வசதிகள் மற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொடர வேண்டும் என்பதும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
