மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கூட்டணிகள், நட்சத்திர வேட்பாளர்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் 4 முனை போட்டி நிலவுகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 291 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாரதிய கோர்க்கா பிரஜாதந்த்ரிக் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான பாஜக 293 இடங்களில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை அக்கட்சி ஆதரிக்கிறது.

மேற்கு வங்கம்
இடதுசாரிகள் கூட்டணியில் மார்க்சிஸ்ட் 195 இடங்களிலும், ஃபார்வர்டு பிளாக் 23 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சிகள் தலா 16 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மற்ற கூட்டணி கட்சிகள் 44 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி அனைத்து 294 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இவர்கள் தவிர ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஹுமாயூன் கபீரின் ஏஜெயுபி கட்சி உள்ளிட்டவை கவனம் ஈர்க்கும் கட்சிகளாக உள்ளன.
இதில் இஸ்லாமியர்கள் மிகுந்த பகுதிகளில் போட்டியிடும் ஹுமாயூன் கபீரின் கட்சி மிகுந்த கவனம் பெறுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவிலுள்ள பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்படும் சுவேந்து அதிகாரியும் இதே பவானிபூரில் களமிறங்குகிறார். இவர் நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிடுகிறார். காங்கிரஸின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பெஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரபல தலைவரான மீனாட்சி முகர்ஜி உத்தர்பாராவில் போட்டியிடுகிறார்.
