அமெரிக்காவால் ஈரானை தடுத்து நிறுத்த முடியாததற்கு காஸ்பியன் கடலில் அமெரிக்கா நுழைய முடியாமல் இருக்கும் தடையே காரணமாக கூறப்படுகிறது.
Summary
ஈரான்-அமெரிக்கா போரில், காமேனி கொல்லப்பட்டும் ஒரு மாதத்துக்கும் மேல் ஈரான் தளராமல் போராடி, அமெரிக்காவையே பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதற்குப் பின்னால் காஸ்பியன் கடலின் மூலோபாய முக்கியத்துவம் உள்ளது. ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கே உரிய இந்த கடல் வழியாக, அமெரிக்கா கண்காணிக்க முடியாத ரஷ்ய ஆயுதங்கள் தொடர்ந்து ஈரானை சென்றடைந்தன என்பது இந்த செய்தியின் மையக்கரு.
ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கி நடைபெற்ற நிலையில், முதல் நாளிலேயே ஈரானின் உட்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஈரான் விரைவில் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் ஒரு மாதத்துக்கும் மேல் போரை தொடர்ந்ததோடு, அமெரிக்காவையே ஒரு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல்
ஈரானிடம் குறைவான ஆயுதங்களே இருந்ததாக மதிப்பிடப்பட்ட சூழலில் ஈரான் இத்தனை நாட்கள் தாக்குப்பிடித்தது எப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு காஸ்பியன் கடலே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
காஸ்பியன் கடலின் மர்மம்..
ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் என இந்த 5 நாடுகளால் 4 புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள காஸ்பியன் கடல் இந்த பகுதியின் முக்கிய வர்த்தக மையமாக திகழ்ந்து வருகிறது. இந்த கடலை இந்த 5 நாடுகளை மட்டுமே பயன்படுத்தமுடியும் என்ற சூழலில், இந்த நாடுகளை தவிர வேறு நாடுகளின் ராணுவத்திற்கு இங்கு அனுமதி கிடையாது என்ற நிலை நிலவுகிறது.

காஸ்பியன் கடல்
இந்த காஸ்பியன் கடலில் இருந்தே ரஷ்யாவின் ஆயுதங்கள் ஈரானுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஈரானின் பிற இடங்களில் அமெரிக்காவால் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிந்த நிலையில், இந்த காஸ்பியன் கடலில் அமெரிக்காவால் ஈரானுக்கு வரும் ஆயுதங்களை தடுத்து நிறுத்த முடியாத நிலை நிலவுகிறது.
இதற்கு முன்னர் உக்ரைன் போரின்போது ஈரானின் விலை குறைந்த ட்ரோன்கள் இந்த காஸ்பியன் கடல் வழியாகவே ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
