’ஆக்கோ’ என்ற படத்துக்காகப் போடப்பட்ட ’எனக்கென யாருமில்லையே’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த `ஆக்கோ’ படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது. நானும் அனிருத்துடன் நடிப்பதாக இருந்தது.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK’. ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி பேசியபோது, “நான் இங்கே வரக்காரணம் நயன்தாரா. அவர்தான் இரண்டு நாளைக்கு முன்பே என்னை தொடர்புகொண்டு அழைத்தார். உண்மையில் இயக்குநர்தான் எனக்கு நண்பர். ஆனால் அவர் கூப்பிடவில்லை. அவருக்கு தலைக்கு மேல் நிறைய வேலைகள் இருக்கும் என புரிந்துகொள்கிறேன். இந்தப் படத்தின் கதை 2012லிருந்தே எனக்கு தெரியும். சினிமாவில் எனக்கு இருக்கும் குறைவான நண்பர்களில் விக்னேஷ் மிக முக்கியமானவர்.
விக்னேஷ் சிவனைப் பலருக்கும் பிடிக்கும். நயன்தாராவுக்கும் பிடிக்கும். அவர்களின் காதல் என் கண்முன்னே நடந்தது. முதலில் விக்னேஷ் அதைச் சொன்னபோது நான் நம்பவில்லை. பின்னர் உண்மையிலேயே, ’நயன்தாரா உன்னை லவ் பண்றாங்களா’ என்று அதிர்ச்சியானேன். நயனிடமும் அதைக் கேட்ட போது `ஆமா அண்ணே’ என்றார். அன்று எப்படி காதலித்தார்களோ, இன்றுவரை அப்படியே உருகி உருகி காதலிக்கிறார்கள்.
`எல்கேஜி’ படத்தின் முதல் காட்சியில் ஒரு காதல் ஜோடியின் மொபைல் போனை எக்ஸ்சேஞ் செய்துகொள்ளும்படி ஒரு காட்சி இருக்கும். `லவ் டுடே’ வந்தபின் அதை மையப்படுத்தி படம் இருந்தது எனப் பலரும் சொன்னார்கள். உண்மை என்னவென்றால் `எல்கேஜி’ படத்தில் அந்தக் காட்சியை எழுதிக் கொடுத்ததே பிரதீப் ரங்கநாதன்தான். `எல்கேஜி’ படத்திற்கு ஒரு டிராஃப்ட் வசனம் அவர் எழுதிக் கொடுத்தார். இப்போது இருக்கும் நடிகர்களில் நான் பிரதீப்பின் ஃபேன். ரஜினி சார், விஜய் சார் படத்தைச் சென்று பார்ப்பதுபோல ஆர்வத்தோடு உங்கள் படத்தையும் சென்று பார்க்கிறேன். பல இளைஞர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருக்கிறீர்கள்.

R J Balaji LIK
இந்தப் படத்திற்கும் அனிருத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இதில் ’ஆக்கோ’ என்ற படத்துக்காக போடப்பட்ட ’எனக்கென யாருமில்லையே’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த `ஆக்கோ’ படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது. நானும் அனிருத்துடன் நடிப்பதாக இருந்தது. அதற்காக படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ரூ.2 லட்சத்திற்கு செக் கொடுத்தார். நான் அன்றே அதனை வங்கியில் போட்டு பணத்தை எடுத்து என் மகனின் முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிவிட்டேன். ஆனால் அந்தப் படம் அனிருத் நடிக்க மாட்டேன் எனச் சொன்னதால் கைவிடப்பட்டது. நான் ஒரு மாதம் கழித்து பணம் சேர்த்து, தயாரிப்பாளரிடம் பணத்தைத் திருப்பி கொடுக்க தொடர்புகொண்டேன். அவர், ’அனிருத் எப்போதோ அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்’ என்றார். என் மகன் பிறந்தநாளுக்கு அனிருத் கொடுத்த பரிசு அது. அவரது முதல் பாடலான ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் என்னுடைய நிகழ்ச்சியில்தான் லான்ச் செய்தார். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் சகோதரத்துவம் துவங்கியது” என்றார்.
