ஐபிஎல்லின் 2ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை, மும்பை அணி வென்றது.
கொல்கத்தா அணி முதலில் 220 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் ஆடிய மும்பை அணி 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 78 ரன்களும், ரியான் 81 ரன்களும் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசன், ஐந்து மாநில தேர்தலுக்கு மத்தியில் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் ஹைதராபாத்தை நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்று வாகை சூடியது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த மும்பை அணி, கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில், கேப்டன் அஜய்ங்கா ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோரின் அரைசதத்தால் அவ்வணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.

rohit sharma
அவ்வணியில் ரஹானே (67), ஃபின் ஆலன் (37), ரகுவன்ஷி (51), ரிங்கு சிங் (33*) ஆகியோர் நல்ல பங்களிப்பை அளித்தனர். மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க வீரர்களான ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இருவரும் சிறப்பாக ஆடி, அரைசதம் அடித்ததுடன், நல்ல அடித்தளமும் அமைத்துக் கொடுத்தனர். ரியான் 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் மூலம் 81 ரன்கள் எடுக்க, ரோகித் சர்மா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உதவியுடன் 78 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா 20 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 18* ரன்களும் எடுக்க மும்பை அணி, 19.1 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றிபெற்றது.
