துருக்கியின் கருங்கடல் கடற்கரையில் கரை ஒதுங்கிய அமெரிக்கத் தயாரிப்பு ஆளில்லா விண்கலம் ஒன்றை, அந்நாடு வெடிக்கச் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தக் கப்பல் கடற்கரையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதேநேரத்தில், அந்தக் கப்பல், துருக்கிய கடல் பகுதிக்குள் நுழைந்தது எப்படி என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர், நான்காவது வாரத்தைத் தொட்டிருக்கும் நிலையில், அது மேலும்மேலும் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போருக்கு மத்தியில், துருக்கியின் கருங்கடல் கடற்கரையில் கரை ஒதுங்கிய அமெரிக்கத் தயாரிப்பு ஆளில்லா விண்கலம் ஒன்றை, அந்நாடு வெடிக்கச் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கியின் உன்யே மாவட்டத்தில் உள்ள ஓர்டு கடலோர நகரில், கடந்த மார்ச் 20ஆம் தேதி, அமெரிக்கத் தயாரிப்பு ஆளில்லா கப்பல் ஒன்று ஆயுதங்களுடன் கரை ஒதுங்கியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால், அப்பகுதிக்கு விரைந்த ஜெண்டர்மெரி குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
மேலும், இஸ்தான்புல்லின் எஸ்ஏஎஸ் குழுமக் கட்டளையகத்தின் நிபுணர்கள் அந்தக் கப்பலை ஆய்வு செய்தனர். அதன்படி, ஏஈஜிஐஆர்-டபிள்யூ (AEGIR-W) என அடையாளம் காணப்பட்ட அந்தக் கப்பல், சியரா நெவாடா கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட ஒரு இராணுவத் தரத்திலான ஆளில்லா கப்பல் என தெரிய வந்தது.
ஏஜிர்-டபிள்யூ என்பது, அதிக அச்சுறுத்தல் நிறைந்த கடல்சார் சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆளில்லா மேற்பரப்புக் கப்பல்களின் வகையைச் சேர்ந்தது. இது சுமார் 10 மீட்டர் நீளமும், 900 கிலோமீட்டர் வரையிலான பயண வரம்பும் கொண்டதுடன், மணிக்கு 25 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் வேகத்தில் செல்லக்கூடியது. இது தானாகவோ அல்லது மனிதக் கட்டுப்பாட்டின்கீழோ இயங்கி, 300 கிலோகிராம் வரையிலான எடைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதன் தோற்றம், உக்ரைன் போர் தொடர்பான சோதனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

AEgir
மேலும், அது இன்னும் இயங்கும் நிலையில் இருப்பதும், ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வகையில் உறுதியுடன் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், அந்தக் கப்பல் கடற்கரையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதேநேரத்தில், அந்தக் கப்பல், துருக்கிய கடல் பகுதிக்குள் நுழைந்தது எப்படி என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த செய்தியை ‘துர்க்கியே டுடே’ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மத்திய கிழக்குப் போர், துருக்கியின் எரிசக்தி வழித்தடங்களையும் வர்த்தகப் பாதைகளையும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
