மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் அனல் தகிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் வெற்றிக்கான ஆயுதங்களில் ஒன்றாக மீனையும் இறைச்சியும் மாற்றியுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக மமதா பானர்ஜி உள்ளார். இந்த நிலையில், அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மம்தாவை அகற்றும் வேலையில் பாஜக தேர்தல் பணிகளை முடுக்கி வருகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் மம்தாவோ எதிர்த்து மோதி வருகிறார். இந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் கடைகளில் மீன்களையோ இறைச்சியையோ விற்க முடியாது எனக் கூறி மாநிலத்தையே அதிரவைத்துள்ளார் மம்தா பானர்ஜி. அசைவ உணவாளர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டு தேர்தல் களத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது. மீன், இறைச்சி ஆகியவை உணவாக மட்டுமல்லாமல் பல லட்சம் பேருக்கான வருமானம் தரும் வாழ்வாதாரமாகவும் உள்ள நிலையில் மம்தாவின் காய் நகர்த்தல் கவனம் பெறுகிறது.

ஹில்சா மீன்கள்
டெல்லியில் கடந்தாண்டு மீன்கள், இறைச்சி விற்பனைக் கடையை மூட பாஜகவினர் நெருக்கடி தந்தது, பிஹார் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தில் பொது இடங்களில் மீன் மற்றும் இறைச்சி விற்பதற்கு தடையை சுட்டிக்காட்டி தன்வாதத்திற்கு வலு சேர்க்கிறார் மம்தா. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் நவராத்திரி நேரத்தில் மீன் உணவு சாப்பிட்ட வீடியோ பரவிய நிலையில் அதை பிரதமர் மோடி விமர்சித்தார். நாட்டின் பன்முக கலாசாரத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாதவராக இருக்கிறார் பிரதமர் என அப்போதும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், மம்தாவின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாஜக அவரது குற்றச்சாட்டுகள் சமூகப் பதற்றத்தை உண்டாக்கும் என பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் பட்டாச்சார்யா, ”வங்காளத்தில் பாஜகவால் இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அல்லது விவாதிக்கப்படவில்லை. வங்காளிகள் மீன்களை விரும்புவதற்கு பெயர் பெற்றவர்கள். மக்கள் தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடுவதைத் தடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
