ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில சுயாட்சிக்கான குரல் ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்னிந்திய மாநில அளவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில், கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் குறைவான அளவே பேசியிருந்தாலும், தவெகவுடன் விசிக இணைந்தே பயணிக்கும் என தவெகவுடனான கூட்டணியை விசிக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதன்மூலம், 2019 நாடாளுமன்றத்தேர்தலில் இருந்து வந்த திமுகவுடனான விசிகவின் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்தச்சூழலில் தான், திருவண்ணாமலையில் நேற்று திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உளூந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”உளுந்தூர் பேட்டை மாநாட்டிற்கு வந்தவர்கள் அமைதியோடு அந்த அரங்கில் அமர்ந்திருந்தார்கள். பொது மக்களுக்கோ; பொதுச்சொத்துக்களுக்கோ சிறு பாதிப்பு கூட சிறுத்தைகளால் ஏற்படவில்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேடையில் என்னை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு முண்டியடித்துக் கொண்டு நடைமேடை வழியாக நுழைந்தார்கள் என்பதை தவிர அத்தனை லட்சம் பேர் திரண்டு இருந்த இடத்தில் எந்த விதமான பதற்றத்திற்கும் இடம் இல்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் கட்டுப்பாடு காத்து தமிழக அரசியல் களத்திலேயே மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட இயக்கம் விசிக என்பதை இந்த மாநாட்டின் மூலம் விடுதலை சிறுத்தைகள் நிருபித்து காட்டியுள்ளனர்.
முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியை அந்த மேடையிலேயே நான் வாசித்தேன். அவர் தொலைபேசி வாயிலாக பெரும் மாநாடு மகத்தான வெற்றி என்று முதலமைச்சர் மனம் திறந்து பாராட்டினார். முதலமைச்சரை நேரில் சந்தித்தபோதும் இதேபோல் வாழ்த்தினார் எனத் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் – விஜய்
தென்னிந்திய மாநிலங்களில் பயணம்
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில சுயாட்சிக்கான குரல் ஒலிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தேசிய இன உணர்வு உள்ளவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற வகையில் நான் முதலில் தென்னிந்திய மாநிலங்களில் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், தமிழ்மாநில சுயாட்சி மட்டுமல்ல அகில இந்திய அளவில் அனைத்து மாநில அரசுகளுக்கும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி தேசிய இனங்களின் ஐக்கியத்தை கட்டமைக்கிற வேலைகளையும் விசிக எதிர்காலத்தில் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளார்.
