எல்லைப் பிரிவினை தொடர்பான அசல் ஆவணத்தை நேபாள அரசு தொலைத்துவிட்டதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் கனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள், படிப்படியாக இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களைக் கைப்பற்றினர். அந்த வரிசையில் நேபாளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எண்ணிய ஆங்கிலேயர்கள், கி.பி. 1814 முதல் 1816 வரை அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தினர். இப்போர்களில் பிரிட்டன் படைகள் வெற்றி பெற்றபோதிலும், அவர்களுக்குப் பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டன.

Britain – Nepal war
இதன் காரணமாக, அப்போது நேபாளத்தை ஆட்சி செய்த கோர்க்கா அரச வம்சத்துடன் பிரிட்டன் அரசு (அப்போது கிழக்கிந்திய கம்பெனி ) ஓர் ஒப்பந்தத்தை மேற்கோண்டது. 1816-ஆம் ஆண்டின் சுகௌலி ஒப்பந்தம் (Treaty of Sugauli) என அழைக்கப்படும் இவ்வொப்பந்தத்தின்படி, நேபாளம் தன் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கைப் பிரிட்டனிடம் நிர்ணயித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், இந்த சுகௌலி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தியா – நேபாள எல்லைப் பகுதிகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் ஓர் அசல் ஆவணம் பிரிட்டன் அரசிடமும், மற்றொரு அசல் ஆவணம் நேபாள அரசிடமும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தங்களிடமிருந்த ஒப்பந்தத்தின் அசல் ஆவணத்தை நேபாள அரசு தொலைத்துவிட்டதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் கனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், நேபாள நாடாளுமன்றத்தின் ‘சட்டங்கள் மற்றும் ஆளுமைக்கானக் குழு’, அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகம், அருங்காட்சியகங்கள், வெளியுறவு மற்றும் சட்ட அமைச்சகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாகத் தேடியும் அசல் ஆவணத்தைக் கண்டறிய முடியவில்லை எனத் தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

Google maps
இவ்வொப்பந்தத்தின் மற்றொரு நகல் இந்தியாவிடம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது பிரிட்டனுக்கும் நேபாளத்திற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் என்பதால், இதன் அசல் ஆவணம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்த ஆவணம் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகம் அல்லது நூலகங்களில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, ஒப்பந்தத்தின் அசல் விவரங்களை வழங்குமாறு பிரிட்டன் மற்றும் இந்திய அரசுகளிடம் நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், தற்போது இந்தியா – நேபாள எல்லையில் அமைந்துள்ள லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை இரு நாடுகளும் நீண்டகாலமாக உரிமை கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் நேபாளத்திற்கே சொந்தமானவை என்பதற்கான முக்கிய ஆதாரம் 1816 சுகௌலி ஒப்பந்தத்தில் உள்ளதாக நேபாளம் வாதிட்டு வருகிறது.
ஆனால், தற்போது அந்த ஒப்பந்தத்தின் அசல் ஆவணமே இல்லாத சூழலில், அப்பகுதிகள் மீதான சட்டப்பூர்வ உரிமையைக் கோரும் வலிமையை நேபாளம் இழந்துள்ளது. மறுபுறம், “சீனாவுடன் மேற்கொண்ட இதுபோன்ற எல்லை ஒப்பந்த ஆவணத்தை நேபாளம் தொலைத்திருந்தால், இந்நேரம் நேபாளத்தின் பாதி நிலப்பரப்பைச் சீனா தனது நாட்டுடன் இணைத்திருக்கும்; இந்தியா என்பதால்தான் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்கிறது” எனப் பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் நேபாளத்தைச் விமர்சித்து வருகின்றனர்.

Nepal Parliament
சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒரு நாட்டின் எல்லையை நிர்ணயம் செய்வது, பிற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களே ஆகும். எனினும், அத்தகைய ஒப்பந்தங்கள் இருக்கும் நிலையிலும் பல நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னைகள் நீடித்து வருகின்றன.
இச்சூழலில், நாட்டின் எல்லைகளை வரையறுத்த மிக முக்கியமான ஒப்பந்தத்தையே ஒரு நாடு தொலைத்துவிட்டுத் தவிப்பது என்பது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. அதுவும் இந்தியாவின் எல்லைத் தொடர்புள்ள ஒப்பந்தத்தையே அந்த நாடு தொலைத்துள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
